2025 ஜூலை 26, சனிக்கிழமை

வட மாகாண காணிப்பிரச்சினைகளை ஆராய மாவட்ட ரீதியில் ஆணைக்குழு: சி.வி

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'வட மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனி ஆணைக்குழுக்களை நியமித்து காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

'இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலே எம்மிடமிருந்து பலாத்காரமாக காணிகள் பறிக்கப்பட்டு வருகின்றன' எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில், நேற்று முன்தினம் (23) வவுனியா மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோது வவுனியாவில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் மற்றும் இராணுவம் காணிகளை அபகரித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு  பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 'இராணுவம் கையகப்படுத்தியுள்ள கட்டிடங்கள் தொடர்பான பட்டியலை நாம் தயாரித்துள்ளோம். அது தொடர்பில் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கின்றார். இதற்கும் அப்பால் வெளிநாட்டு தலைவர்கள் வரும்போதும் இது தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் நன்மைகள் ஏற்படுமோ என தெரியாது.

இதன் காரணமாகத்தான் நான் சகலதையும் உள்ளடக்கும் விதமாக வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கோசத்தை எழுப்பி வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வெளிநாட்டமைச்சர்கள் வரும்போதும் பேசி வருகின்றேன்' என்றார்.

'எனது அறிவுக்கெட்டியவரையில் ஆணைக்குழுக்களை அமைத்து அந்த அந்த இடங்களில் எவ்வகையான அடிப்டையில் மக்கள் வாழ்கின்றார்கள் என்பது தொடர்பில் ஆக்ய்வது சிறப்பு என யோசித்து வருகின்றேன். அவ்வாறாறே அண்மையில் முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கும் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

அந்த வகையில் காணிப் பிரச்சனைகளுக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து ஆணைக்குழுக்களை அமைத்து அவை பிரச்சனைக்குரிய காணிகளை நில அளவைத் திணைக்களத்துடன் இணைந்து வரைபடங்களையும் தயாரித்து எந்த எந்த இடங்களில் யார் யார் இருக்கின்றார்கள்?, எந்த அடிப்படையில் இருக்கின்றார்கள்?, அவர்களுக்குரிய உரித்து என்ன என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தால் அதன் அடிப்படையில் நாம் நன்மைகளை பெறலாம்' என்றார்.

எனினும் இவ்வாறான ஆணைக்குழுக்களை அமைப்பது தொடர்பாக சட்டத்தரணியொருவரை ஆராய்ந்து கூறுமாறு கேட்டபோது அவருடைய ஆராய்ச்சியின் படி ஜனாதிபதி மாத்திரமே ஆணைக்குழுக்களை நியமிக்கலாம் என தெரிவித்திருந்தார். அது சரியோ பிழையோ தெரியாது. அப்படியில்லை என்றால் ஒரு குழுவை நியமித்து அந்த இடங்கள் சம்பந்தமாக விபரங்களை தரும் விதமாகவே அது அமையும்.

இதன் மூலமாக காணியில் உள்வர்களுக்கு என்ன உரித்துள்ளது. உரித்தில்லை என்றால் ஏன் அவர்கள் அங்கு இருக்கின்றார்கள் என்ற பல பிரச்சனைகளுக்கு பரிகாரம் காணும் விதமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் இப் பிரச்சனைகள் தொடர்பில் நாம் எப்போதும் பேசிக்கொள்ளலாம்.

அவ்வாறான இடங்களில் இராணுவம் இருக்குமாயின் அவர்களை நாம் வெளியேற்ற முடியாது. அரசாங்கத்துடன் வேறு விதமாக பேசியே வெளியேற்ற முடியும். நாம் மேற்கொள்ளும் ஆய்வுகளின் பிரகாரம் சட்டத்திற்கு விரோதமாக இராணுவத்தினர் காணிகளில் இருக்கின்றார்கள் என அறிக்கையில் குறிப்பிட்டோமேயானால் அவ் அறிக்கைகளை பெற்று உரியவாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு வெளிநாட்டு ஸ்தாபனங்களும் அரசாங்கங்களும் முன் வந்திருக்கின்றன. இவை தொடர்பில் நான் அவர்களுடன் பேசியிருக்கின்றேன்.

இங்கு வன்முறைபோன்ற ஒரு சூழல்தான் காணப்படுகின்றது. எவ்வாறெனில் பின்புலத்தில் இராணுவத்தினரை வைத்துக்கொண்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட முயடிக்து. எம்மால் மீண்;டும் இராணுவத்துடன் போரிட முடியாது. இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலே எம்மிடமிருந்து பலாத்காரமாக காணிகள் பிடுங்கப்பட்டுள்ளது.

இதற்கு நாம் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதுவும் உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு மக்களும் அரசாங்கத்திற்கு கொடுக்கும் நெருக்குதல் மூலமே நாம் காணிகளை காத்துக்கொள்ள முடியும்.

வட மாகாணசபைத்தேர்தலும் இந்தியாவின் நெருக்குதல் காரணமாகவே நடந்தது. அதேபோன்றே நாம் இராணுவத்தினர் செய்து வரும் அட்டகாசங்களைப்பற்றியெல்லாம் குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அரசாங்கனத்திற்க எடுத்துக்கூறி அழுத்தத்தை பிரயோகித்தாலேயே அவற்றை முடிவுக்கு கொண்டு வரலாம் என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X