2025 ஜூலை 26, சனிக்கிழமை

பஸ் வண்டி நடத்துநர்கள் அநாகரிகமாக நடப்பதாக முறைப்பாடுகள்: டெனிஸ்வரன்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்,நவரத்தினம் கபில்நாத்

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டி நடத்துநர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலத்திலிருந்து   முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வியாழக்கிழமை  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'மதகுருமார், பெரியவர்கள், தாய்மார்கள், படித்தவர்கள், பாமரமக்கள் போன்றவர்கள் மீது நடத்துநர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதாகவும் பெண் பயணிகளை கண்டபடி தொட்டு பஸ் வண்டியினுள்  ஏற்றி, இறக்கி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பஸ் தரிப்பிடம் இல்லாத இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும், பயணிகளை ஆடு மாடுகளைப் போல அதிகளவில் ஏற்றிச் செல்வதும் பயணிகளிடமிருந்து  பயணத்திற்கான பணத்தினைப் பெற்றுக்கொண்டு  பயணச் சீட்டுக்களை வழங்காமலும் பயணிகள் வழங்கும் பணத்திற்கு மீதித் தொகையை மக்களுக்கு வழங்காமல் விடுவது.  முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், அங்கவீனமுற்றோர் மற்றும் மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்களை அவர்களுக்கு வழங்காது விடுவதும் அதிகரித்து வருவதாக நாளாந்தம் மக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் வருகின்ற ஜனவரி மாதமளவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் இவ்விடயம்  தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தனியார் பஸ் வண்டிச் சங்கத் தலைவர்களும் சமாசத் தலைவர்களும் கூடிய கரிசனை எடுத்து மேற்படி விடயங்களை  உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X