2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பொன்தீவுகண்டல் கிராம காணி இரு சமூகங்களுக்கும் பிரிப்பு: பிரதேச செயலர்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


'நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்தீவு கண்டல் கிராம வீட்டுத்திட்ட பணிகளை நிறுத்த முடியாது. குறித்த காணி இரண்டு சமூகங்களுக்கும் ஏற்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக ஆலயம், பாடசாலை என்பன தனித்தனியாக அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்' என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராம காணி விவகாரம் தொடர்பாக மன்னார் அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பியவிற்கும் பொன்தீவு கண்டல் மக்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்வித தீர்வுகளும் இன்றி முடிவடைந்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரச அதிபரின் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொன்தீவு கண்டல் கிராம மக்கள் மற்றும் பொன்தீவு கண்டல் அளவக்கை பங்குத்தந்தை சுரேஸ் றெவல் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

இன்று  செவ்வாய்க்கிழமை மதியம் 12.05 மணிமுதல் 2 மணிவரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது பொன் தீவு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது குறித்த கிராம மக்களின் சார்பாக சிலரையும், பொன்தீவு கண்டல், அளவக்கை பங்குத்தந்தை சுரேஸ் றெவல், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிற்கும், குறித்த கிராம மக்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

இதன் போது பொன்தீவு கண்டல் கிராம மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்க அதிபருக்கு கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது தொடர்பாக அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அங்கு கருத்து தெரிவிக்கையில்,

'நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்தீவு கண்டல் கிராம வீட்டுத்திட்ட பணிகளை என்னால் நிறுத்த முடியாது. எனினும் குறித்த காணி இரண்டு சமூகங்களுக்கும் ஏற்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக ஆலயம், பாடசாலை என்பன தனித்தனியாக அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

குறித்த காணி பிரச்சினை தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளரை தவிர என்னால் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. நீங்கள் அவரிடம் சென்றே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்' என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அம்மக்களிடம் தெரிவித்தார். இதனால் எவ்வித தீர்வுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் மதியம் 2 மணியளவில் குறித்த கலந்துரையாடல் நிறைவடைந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .