2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மன்னாரில் காணாமல் போனவர்களது உறவினர்கள் கண்டன ஊர்வலம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 10 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சர்வதேச மனித உரிகைள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைமையில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் காணாமல் போனவர்களுடைய உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தினுடன் இணைந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கக் கோரி கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

குறித்த நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிலும் இடம்பெற்றது. இன்று காலை 11 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவில் இருந்து குறித்த ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதன் போது தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் தலைவர் ஹேமன் குமார, வாழ்வதற்கான உரிமை அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெனாண்டே, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் ஜே.பி.சிந்தாத்துரை, அருட்தந்தை எஸ்.நேரு,அருட்பனி எஸ்.டெரன்,மற்றும் காணமால் போன சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. பின் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய முன்னிலையில் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'1990 வன்செயல் தோன்றிய காலம் தொடக்கம் இன்றுவரை காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரும் மன்னார் மக்களின் வேண்டுகோள். 1990ஆம் ஆண்டு வன்செயல் இந்நாட்டில் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரையான 23 வருடகாலத்தில் பெருந்தொகையான தமிழர்கள் இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் ஆயுதப்படைகளால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், அடையாளம் தெரியாத ஆயுதம் தரித்தவர்களால் கடத்திச்செல்லப்பட்டோர், பொலிஸாராலும் ஆயதப்படையினராலும் விசாரணைக்கென்று அழைக்கப்பட்டதின் பேரில் தாமாக படை முகாம்களுக்கும், பொலிஸிற்கும் சென்றவர்கள் என பலவகைப்பட்டோர் அடங்குகின்றனர்.

மேலும் வன்னிப் போரின் போது வன்னியில் குடியிருந்தவர்களாகஅரசு பதிவேடுகளில் காணப்பட்டவர்களின் தொகைக்கும் போரின் பின் முகாம்களில் தடைப்படுத்தி வைக்கப்பட்ட மக்களின் தொகைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம்; 146,000 பேருக்கும் மேலானதாகும்.

இந்த 146,000 பேரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் அடங்குவர். இவர்களுள் எமது மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும் அடக்கப்பட்டுள்ளனர். இக்கணக்கின்படி எமது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் எம்மிடமுள்ள கணக்குகளின் விபரம் வருமாறு:

1990 முதல் 2013 வரை காணாமல் ஆக்கப்பட்டடோர்  300 ற்குமேற்பட்டோர். சிறையில்அடைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டோர். 100ற்கு மேற்பட்டோர்.  இன்னமும் தடுப்பு முகாம்களில் மீளக்குடியமர அனுமதியின்றி அடைக்கப்பட்டோர்  200ற்கு மேற்பட்டோர். இதுவரையில் காணாமற் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 178 விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக, இவர்களை மீட்கும் முயற்சியாக நாம் பொலிஸ் படைத்தரப்பு,அரச அதிபர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்,மனித உரிமை ஆணைக் குழுக்கள், ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், என்பவற்றிற்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளும் அவர்களால் அழைக்கப்பட்டு நாம் பல தடவைகளில் முகம் கொடுத்த விசாரணைகளும் இதுவரை எவ்வித பயனையும் தராமையால் மனைவிகள் கணவர்களை இழந்தும், பெற்றோர், பிள்ளைகளை இழந்தும்,நண்பர்கள் உறவுகளை இழந்தும்,நாங்கள் கண்ணீரும் கவலையுமாக வாழ்ந்து வருகிறோம்.

இந்த இழப்புக்களுக்கு காரணமான யுத்தமும் அதனை முன்னெடுத்த அரசும் அப்பாவி மக்களின் இக்கவலைகளையிட்டு எவ்வித அக்கறையுமில்லாதுள்ளனர். இவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதைக் கூட மூடி மறைத்து எங்களைஅங்கலாய்ப்பில் தவிக்கவிட்டுள்ளனர்.

எம்மால் இழக்கப்பட்ட இந்த உறவுகள் பற்றிய எமது கவலையைத் திசை திருப்பவோ என்னவோ அரசு எம்மீது வேறு பலசுமைகளையும் தொடர்ந்தும் சுமத்தி வருகிறது. மீளக்குடியமர்ந்தவர்களுக்கு உரிய நிவாரணமோ வேலைவாய்ப்புக்களோ, வழங்கப்படவில்லை.

பல நூற்றுக்கணக்கானோருக்கு அவர்களது சொந்த நிலத்தில் மீள்குடியமர அனுமதி வழங்கப்படாது காடுகளிலும் வளமற்ற தரிசு நிலங்களிலும் அந்தரிக்க விடப்பட்டுள்ளனர். காணியுரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் வளமான நிலங்களும் இராணுவத் தேவைக்கும் தென்பகுதி மக்கள் குடியேற்றத்திற்குமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி கரை யோரங்களில் படையினரின்  உதவியுடன் வேற்றிடத்தவர்கள் குடியமர்த்தப்பட்டு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதிகளில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தை ஏற்படுத்தி மக்களது இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் வீடுகளும் வணக்கஸ்தலங்களும் படைத் தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டு யுத்தம் முடிந்த பின்னரும் அகதி வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் அன்றாட பொது விடயங்களில் கூட படைத்தரப்பின் தலையீடு இருப்பதால் மக்களின் இயல்;பு நிலை முழுமையாக தடைப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஒரு இன அழிப்பு மௌன யுத்தம் படைத்தரப்பு மூலம் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது. இந்த துன்பத்தை நீக்க நாட்டின் அதி உயர் அதிகார தலைவராகிய தாங்கள் உண்மை நிலையைத் தெளிவுபடுத்தி எமது அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பணிவுடன் இரந்து வேண்டுகின்றோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .