2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கருத்தடையின் போது உயிரிழந்த பெண்; விசாரணைகள் மும்முரம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

கருத்தடை செய்ததில் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலம் தெரிவித்ததாவது, 'வந்தவேளை அவரை பரிசோதனைக்கு உட்படுத்தி கருத்தடை உபகரணமும் பொருத்தப்பட்டது. இருந்தும் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மீண்டும் வைத்தியசாலைக்கு வந்தபோது, அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியதை அடுத்து அப்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பிறகு அவருக்கு நடந்த சிகிச்சைகளிலே அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வைத்தியருக்கு வழங்கிய தகவல்களில் இருந்த குளறுபடியே அவர் உயிரிழப்பதற்கு காரணமாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், வேரவில், கிராஞ்சி பகுதிகளில் கட்டாயக் கருத்தடை செய்ததாகக் கூறப்படும் 56 பெண்களிடம் எனது பணிப்புரையில் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டது. இதன்போது குறித்த பெண்களின் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விருப்பத்தின் பேரிலே கருத்தடை உபகரணங்கள் பொருத்தப்பட்டள்ளன.

அந்தக் கருத்தடை உபகரணம் 5 வருடங்களுக்கான ஒரு தற்காலிக கருத்தடை உபகரணமே ஆகும். இருந்தும் இவ்விடயம் பெரிதுபடுத்தப்பட்டதிற்கான காரணம் ஒரே நேரத்தில் அதிகமான பெண்களுக்கு இவ்வாறு கருத்தடை உபகரணம் பொருத்தப்பட்டதாகும். இந்தப் பெண்கள் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பட்சத்தில் அந்த கருத்தடை உபகரணத்தினை அகற்ற முடியும்.

இருந்தும் இவ்வாறு கருத்தடை உபகரணம் பொருத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் வட மாகாணத்தில் தற்போது பிறப்பு வீதத்தினை விட இறப்பு வீதம் கூடுதலாக இருக்கின்றன. இதனால் எமது சமுதாயப் பரம்பலினை மேற்கொள்ள வேண்டிய தேவை தற்போது உள்ள நிலையில் இவ்வாறு கருத்தடை மேற்கொள்ள வேண்டிய அவசரம் இல்லை. அதற்கான காலமும் இது இல்லை' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .