2025 ஜூலை 24, வியாழக்கிழமை

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை வட மாகாண சுகாதார அமைச்சு பராமரிக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வடமாகாணத்தில் யுத்த காலத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாதுள்ளவர்களை பராமரிக்கும் செயற்பாட்டை வட மாகாணசபை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நெளுங்குளத்தில் அமைந்துள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் விடுதியின் திருத்த வேலைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தொவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'யுத்தம் காரணமாக பல இளைஞர், யுவதிகள் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடமாட முடியாது உள்ளனர். இவர்களில் சிலர் தகுந்த பராமரிப்பு இன்மையால் உயிரிழந்தும் உள்ளனர்.  அவர்களை வட மாகாண சபையின் கீழ் சுகாதார அமைச்சு பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் வவுனியா ஆயுர்வேத வைத்தியசாலையில் யுத்த காலத்தில் அரசசார்பற்ற நிறுவனம் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க பயன்படுத்திய விடுதியை திருத்தம் செய்து எதிர்வரும் மாத்தில் இருந்து இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ் விடுத்தியில் தங்குமிடம், உணவு உட்பட பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களை முழு நேரமும் பராமரிப்பதற்கான செயற்பாட்டையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 தனி அறை வசதிகளுடன் விடுதி உள்ள போதிலும் பலர் இதற்கு விண்ணப்பிப்பதனால் எதிர்காலத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இவ்வாறான பராமரிப்பு விடுதிகளை ஆரம்பிக்க உத்தோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இப் பராமரிப்பு விடுதியில் தங்கி வாழ விருப்பமுள்ளவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்திலும் வவுனியா தாதியர் கல்லூரியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் உப அலுவலகத்திலும் வவுனியா சித்த ஆயுர்வேத வைத்தியசாலையிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும்' என அவர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .