
-சி.சிவகருணாகரன்
வடபகுதியில் சுமுகமான முறையில் நடைபெற்று வந்த தனியார் பேருந்துகளின் போக்குவரத்துச் சேவையில் வவுனியா மாவட்டத்தின் சில தனியார் பேருந்து உரிமையாளர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வவுனியா மாவட்டச் செயலகம் அனுசரணையாக நடந்து கொள்வதால் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் த. ஜெகதீஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியாவிலிருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவுக்கான போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக நடைமுறையை மீறி வவுனியா மாவட்டச் செயலகம் சில தனியார் பேருந்துகளுக்கு வழங்கிய அனுமதி கிளிநொச்சி மாவட்டத்தின் தனியார் பேருந்து உரிமையாளர்களைப் பாதிப்பதுடன் சேவையிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சீர் செய்வதற்காக நாம் எடுத்த முயற்சிகளுக்கு நியாயமான பதிலை உரியவர்கள் தரவில்லை. இதனையடுத்து, நேற்று (27) அடையாளப் பணிப்புறக்கணிப்பாக காலையில் எமது சேவைகளை இடைநிறுத்தியிருந்தோம் என்றார்.
இன்று காலை பரந்தன் சந்தியில் தனியார் பேருந்துச் சேவையாளர்கள் அனைவரும் ஒன்று கூடி சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பொலிஸ் அத்தியட்சகர் எச்.மகேந்திரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமைகளை ஆராய்ந்து வவுனியா மாவட்ட அரச செயலகம், தேசிய போக்குவரத்துச் சபை, பொலிஸ் தரப்பு போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளைச் சீர் செய்தனர். இதனையடுத்து மீண்டும் வழமைபோல சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுகள் மேற்கொள்ளப்பட்டு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் சேவையாளர்களிடம் தெரிவித்தார்.
.jpg)