2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மன்னார் பெரும்போக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவசர கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் பெரும்போக விவசாயிகள்  எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்வரும் 5ஆம் திகதி கட்டுக்கரை குளம் திறந்து விடப்பட்டு விவசாய செய்கைகளுக்கு நீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் பெரும்போக விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் உயிலங்குளம் ம.வி பாடசாலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பெரும்போக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவிக்கையில், 'தற்போது மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யாததன் காரணத்தினால் பெரும்போக விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு நீர் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கட்டுக்கரைக் குளத்தை நம்பி தற்போது 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டு மாதங்களை கடந்த பயிராக அப்பயிர்கள் காணப்படுகின்றன.

தற்போது நெற்பயிருக்கு உரிய நீர் இல்லாமையினால் ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது. தற்போது எஞ்சியுள்ள பயிர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கட்டுக்கரை குளம் இதுவரை திறந்து விடாததின் காரணத்தினாலேயே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மேற்படி விவசாயிகள் சுட்டிக்காட்டினர். எதிர்வரும் மாதம் நெற்கதிர் வருகின்ற காலம் என்பதினால் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது மட்டுமின்றி அப்பகுதிகளில் கால்நடைகளினால் விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே விவசாய பயிர்ச் செய்கையை பாதிப்படையச் செய்கின்ற வகையிலும், பயிர்களை உண்ணும் வகையிலும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இவ்விடயங்கள் தொடர்பில் உரிய அதிகாரி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்' என விவசாயிகள் மேலும் கோரினர்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய அரசாங்க அதிபர், 'விவசாக்யிகள் எதிர்நோக்குகின்ற இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி எதிர்வரும் 5ஆம் திகதி கட்டுக்கரை குளம் திறந்து விடப்பட்டு விவசாய செய்கைகளுக்கு நீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்று கூறினார்.

திறந்து விடப்படுகின்ற நீர் தேவையற்ற விதத்தில் பயன்படுத்திக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், உதவி மாவட்ட செயலாளர் எம்.பரமதாஸ், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தேவ ரதன், பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.மயூரன், நீர்ப்பாசன திணைக்கள திட்ட முகாமையாளர் கிருஷ்ணரூபன் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .