2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பிரதமசெயலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயார் : வடமாகாண சபை உறுப்பினர் சிவமோகன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண அரச திணைக்களங்களில் வழங்கப்பட்டுள்ள சாரதி நியமனங்களில் மோசடி முயற்சியில் பிரதமசெயலாளர் ஈடுபட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க தயார் என வட மாகாணசபையின் உறுப்பினர் வைத்தியகலாநிதி சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

'வெளிவாரி, அமைய, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சாரதிகளின் சேவையினை இம் மாதத்துடன் முடிவுறுத்துமாறு சகல திணைக்களங்களுக்கும் வடமாகாண பிரதம செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காதுவிடின் பிரதம செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நான் தயாராகவுள்ளேன்.

வடமாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையிலுள்ள வெளிவாரி, அமைய, ஒப்பந்த அடிப்படையில் சாரதிகளாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப்பரீட்சையினை எழுதிய பலர் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தும் அவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை.

இது தொடர்பாக ஏற்கெனவே முதலமைச்சருக்கு கடிதம் மூலம் நான் அறிவித்திருந்தேன். திடீரென பழிவாங்கும் நோக்குடன் வடமாகாண பிரதம செயலாளரினால் அவசர அவசரமாக கடந்த 23 ஆம் திகதி யன்று கடிதம் மூலம் சகல அரச திணைக்களங்களுக்கும் இச் சாரதிகளின் சேவையினை 31.12 அன்றுடன் முடிவுறுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ச்சியாக அதையே நம்பி குடும்பத்தை பார்த்து வந்த பலரது நிலை கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

05.04.2013 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட NPஃ07ஃழுநுளுஃபுநுN என்னும் இலக்கமுடைய மாகாண பொதுநிர்வாக சேவைகள் திணைக்களத்தின் செயலாளர் கே.தெய்வேந்திரம் அவர்கள் ஒப்பமிட்ட கடிதம் மூலம் சாரதிகளை உள்ளீர்ப்பதற்கான பரீட்சையில் தோற்றி 80 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் திடீர் என 170 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு இடம்பெற்றமை மோசடியான செயலாகும்.

எனவே, ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள நேர்முகப் பரீட்சையை ரத்து செய்து மீள்நேர்முகப் பரீட்சை ஒன்று ஏற்கெனவே கூறப்பட்டது போன்று நடத்தப்படுவதுடன்,  வெளிவாரி, ஒப்பந்த, அமைய அடிப்படையிலான சாரதிகளின் சேவையானது இம் மாதத்துடன் முடிவுறுகின்றது என தெரிவித்து வடமாகாண பிரதம செயலாளரினால் அனுப்பப்பட்டுள்ள கடிதமும் ரத்துச் செய்யப்படவேண்டும் என சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

இவ் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள சாரதிகள் தொடர்பாக கவனம் செலுத்தி பரிசீலிக்கப்படாத இடத்து தேவை ஏற்படின் சட்ட நடவடிக்கைக்கும் தாயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .