2025 ஜூலை 26, சனிக்கிழமை

மாணவப் பருவத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்: கே.பி.

Suganthini Ratnam   / 2014 மே 30 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன் 


மாணவப் பருவத்தில் கிடைக்கின்ற காலத்தை சிறுவர்கள் சரியாக பயன்படுத்தி கல்வியில் உயர்ந்த பிரஜைகளாக எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என நேட்டோ நிறுவனத் தலைவரும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் தந்தையுமான செ.பத்மநாதன் (கே.பி) தெரிவித்தார்.

கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லச் சிறுவர்களில் மே மாதம் பிறந்தவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டமும் மாணவர் மன்ற நிகழ்வும் செஞ்சோலை சிறுவர் இல்ல மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது. இதில்  உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கல்வியால் எதையும்; பெறமுடியும். கல்வியில் உயர்ந்தவர்களாக விளங்கும்போது எமது வாழ்வும் உயர்வானதாக மாற்றம் பெறும்.  ஆண்டவனால் தரப்பட்ட இந்த வாய்ப்பை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி திறமையாக படியுங்கள். திறமைகளுடன் சிறகடித்து பறவுங்கள்.  வெற்றியாளர்களாக உருவாகுவீர்கள்.

மாணவர்களின் முன்னேற்றத்தை அருகிலிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைவதுடன், சிறுவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்கள் என்ற நம்பிக்கையும்  எனக்கு உள்ளது.   இவர்களை சமூகத்தின் நற்பிரஜைகளாக உருவாக்குவேன். இதற்கான செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.

எனது நண்பர்கள்,  கருணை உள்ளம் கொண்டவர்களின் ஆதரவுடன் செஞ்சோலை முகாமைத்துவச் சபைத் தலைவராக எனது கடமையை சிறப்பாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்திலும் எனது சேவையை திறம்பட ஆற்றுவேன்.

மாணவச் செல்வங்களே! நான் மீண்டும், மீண்டும் உங்களிடம் கேட்பது உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம். ஆண்டவனால் தரப்பட்ட இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி திறமையாக படியுங்கள். நாம் அன்பு (ஆண்கள்) இல்லத்தை ஆரம்பிக்கும்போது கையில் ஒரு ரூபா இல்லை. இருந்தும், நம்பிக்கையோடு ஆரம்பித்தோம். இன்று பாரதி (பெண்கள்) மற்றும் செஞ்சோலை சிறுவர் இல்லங்கள் என்று இல்லங்கள் வளர்ந்து நிற்கின்றன.

இந்த வெற்றிக்கு பின்னால் நீங்கள்தான் இருக்கின்றீர்கள். மாணவர்களே உங்களுடைய ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் எங்களை ஊக்குவிக்கின்றது' என்றார்.

இதன்போது பாடல், குழுப்பாடல், கவிதை,  அபிநய நடனம், நடனம், பொது அறிவுப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கோட்ட வலய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X