2025 ஜூலை 16, புதன்கிழமை

செஞ்சோலை சிறுவர்களின் சுற்றுலா

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு (நெர்டோ) அமைப்பினால் நடாத்தப்பட்டு வரும் ஆண்களுக்கான 'அன்பு' இல்லம், பெண்களுக்கான 'பாரதி', 'செஞ்சோலை' இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள், கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுலாப் பயணத்தினை மேற்கொண்டு இருந்தனர்.
 
ஓகஸ்ட் மாதம் 19, 20, 21ஆம் நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக 215-க்கும் அதிகமான சிறுவர்கள் மூன்று பேருந்துகளில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கிய பூரண நிதி உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர்.
 
சுற்றுலாவின் தொடக்கத்தில் உலகின் அதிசயமான திருகோணமலை, கிண்ணியா வெந்நீரூற்றுப் பகுதியினை சிறுவர்கள் சென்று பார்வையிட்டு இருந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து, நிலாவெளியில் அமைந்து உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஆலயத்தினை சிறுவர்கள் வழிபாடு செய்ததுடன், ஆலய நிர்வாகத்தினர் வழங்கிய மதிய உணவிலும் கலந்து கொண்டனர்.
 
அன்று மாலை திருகோணமலை கடற்பரப்பினை சிறுவர்கள் படகில் சுற்றிப் பார்வையிட்டதோடு, அப்பகுதி கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
  
இரண்டாவது நாளான 20ஆம் நாள் ஈழத்தின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தினை சிறுவர்கள் வழிபட்டு- தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தினை நோக்கி தமது பயணத்தினை தொடங்கினர்.
 
சுமார் மூன்று மணி நேர பயணத்தின் பின்னர் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையினை சென்றடைந்த சிறுவர்கள், மூன்று மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீராடி தமது பொழுதினை இனிதே கழித்தனர். 
 
அன்று மதியம் கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகமும் அப்பகுதி மக்களும் சிறுவர்களுக்கு சிறப்பான முறையில் மதிய உணவு தயாரித்து வழங்கி இருந்தனர். 
 
அன்றைய பொழுது தாந்தாமலை முருகன் ஆலய வழிப்பாட்டுடன் நிறைவு பெற்று இருந்தது.
 
சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான 21ஆம் நாள், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வழிபாட்டுக்குப் பின்னர், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனுக்குச் சென்று அப்பகுதியினையும் சுற்றிப் பார்வையிட்டு இருந்தனர். இங்கு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சிறுவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
 
தொடர்ந்து, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று பின்னர், மட்டக்களப்பில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லடி பாலத்தினையும் சிறுவர்கள் பார்வையிட்டு இருந்தனர்.
 
அங்கிருந்து மீண்டும் திருகோணமலை திரும்பிய சிறுவர்கள், அங்கு உள்ள பளிங்கு கடற்கரையில் நீராடி மகிழ்ந்து- தமது சுற்றுலாவினை இனிதே நிறைவு செய்தனர்.
 
இந்த சிறுவர்களில் பெருமளவிலானோர் போரில் சாவடைந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் பிள்ளைகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .