2025 ஜூலை 16, புதன்கிழமை

விவசாய நிலங்களை விடுவிக்க படைத்தரப்பு இணக்கம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோர் வசமிருந்த 642 ஏக்கர் விவசாய நிலங்களை விடுவிப்பதற்கு இராணுவத்தினரும் விமானப்படையினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக  கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ.பரமேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.

கேப்பாப்பிலவு, வாவெட்டிகுளம், இயன்கன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள 67 விவசாயிகளுக்கு சொந்தமான 320 ஏக்கர் விவசாய காணியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகள், கடந்த வெள்ளிக்கிழமை (12) இராணுவத்தினரால் அகற்றப்பட்டன.

தொடர்ந்து, கமக்கார அமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாயிகள் ஆகியோர் இராணுவ உயர் அதிகாரிகளிடம் சென்று, தங்கள் வயல் நிலங்களை அடையாளப்படுத்தினர்.
 
இதேவேளை, விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இயன்கன்குளம் பகுதியிலுள்ள 32 விவசாயிகளுக்கு சொந்தமான 82 ஏக்கர் வயல் நிலமும், வாவெட்டிக்குளம் பகுதியிலுள்ள 34 விவசாயிகளுக்கு சொந்தமான 240 ஏக்கர் வயல் நிலமும் விவசாயிகளிடம் வழங்கப்படவுள்ளன.

இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை, விமானப்படையினரும் இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவும் இணைந்து அகற்றி வருகின்றனர்.

மேற்படி இரண்டு பிரிவு வயல் நிலங்களும் எதிர்வரும் 25ஆம் திகதி விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக வழங்குவதாக இராணுவத்தினர் உறுதியளித்தனர்.

விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்த விவசாய நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன.

அத்துடன், அப்பகுதியில் நின்றிருந்த கால்நடைகளையும் உரிமையாளர்கள் எடுத்துக்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மேற்படி பகுதிகளில் இம்முறை காலபோக நெற்செய்கையை விவசாயிகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .