2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கணினி கூடம் கையளிப்பு

George   / 2014 செப்டெம்பர் 20 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


கணினி மூலம் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கென வடமாகாணத்தில் 24 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இன்று சனிக்கிழமை(20) தெரிவித்தார்.

முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிபர் அறை, கணினி கூடம் கையளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மாணவர்களின் கற்றல்  செயற்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்கு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். யாழ். மாவட்டத்தில் சாதாரண தரம் கற்கும் மாணவர்களுக்கு கணினி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன் மூலம் அந்த மாணவர்கள் கூடுதலான நன்மைகளை பெற்றிருக்கிறார்கள் என்பதனை அம் மாணவர்களின் பெறுபேறுகளை வைத்து எங்களால் அவதானிக்க முடிந்தது.

அதுபோல ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாறு கணணி மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எமது அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்காக மாகாணத்திலுள்ள 24 பாடசாலைகளை தெரிவு செய்திருக்கிறோம். அதில் இந்த தண்ணீரூற்று இந்து கலவன் பாடசாலையையும் உள்வாங்குமாறு வலயக்கல்விப் பணிப்பாளரை கேட்டுள்ளேன்.

எனவே, ஆசிரியர்கள் கணணி பற்றிய அறிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாகவுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாத விடுமுறையின் போது ஆசிரியர்கள் கணினி பற்றிய கற்கைகளில் ஈடுபடவேண்டும். அப்போதுதான் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.

அத்துடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமன்றி, பிரதேசம், தமிழர் பாரம்பரிய விழுமியங்கள் என்பனவற்றை எப்போதும் எடுத்துக் கூறவேண்டும் என்றார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த பொன்.நடராசாப்பிள்ளை (மாணிக்கவாசகர்) அவர்களின் நினைவாக அவரது மகன் உதயகரன் மற்றும் குடும்பத்தினர் (அவுஸ்ரேலியா) குறித்த கணணிக் கூடம், அதிபர் அறை ஆகிய இணைந்த கட்டடத்தை நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர்.

பாடசாலை அதிபர் க.குகேந்திரன் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் உ.முனீஸ்வரன், ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கனகரத்னம், செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் குமரன் பத்மநாதன் (கே.பி), தொழிலதிபர் ந.உதயகரன் (அவுஸ்ரேலியா) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .