2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வடமாகாண சபையை அரசாங்கம் ஸ்தம்பிக்கச்செய்கிறது: சி.வி

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் எம்மை ஸ்தம்பிதம் அடையச்செய்ய எத்தனித்து வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் விமான பயணசீட்டு முகவரலுவலகமொன்றினை இன்று (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எவ்விதத்திலாயினும் எமது நடவடிக்கைகளுக்கு தடைகள் விதித்து எம்மை ஸ்தம்பித நிலைக்கு கொண்டு வர கூடியவற்றையெல்லாம் இந்த அரசாங்கமும் அதன் அடிவருடிகளும் முயற்சிக்கின்றார்கள் என்பது எமக்கு நன்றாக விளங்குகின்றது.

ஆனால் அதற்காக நாம் வருந்திக்கொண்டு வாழாமலில்லை. மக்களுக்கு வழமான வாழ்வை வாழ வழிமுறைகளை அமைத்தே தருகின்றோம். இதில் தனிப்பட்டவர்களதும் தனியார் துறையினரதும் தரவுகளை பெற்றே முன்னேறி வருகின்றோம்.

பளையில் காற்றாலை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். இதனை அரசாங்மோ ஆளுநரோ அறிந்தால், அதை வெலி-ஓயா பகுதிக்கு ஆற்றுப்படுத்தக்கூடும் என்ற பயத்தில் சில பிரத்தியேக நடவடிக்கைகளை எடுத்தோம். இதனை அறிந்து கொண்ட ஆளுநர் ஆட்சேபனை தெரிவித்தார்.

ஆனால், எமது மக்கள் சார்பாக மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் தட்டிக்கழிக்க முடியாத நிலையில் அதனை ஏற்றுக்கொண்டார்.

அரசாங்கத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் எமக்கும் அன்னியோன்னியம் அற்ற நிலை காணப்படுவதற்கு, அரசியலே காரணம். அரசியலை மறந்து மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் பாங்கு எம் மத்தியிலும் உருவாகவேண்டும்.

அரசசார்பற்ற நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் மக்கள் நலன் சார்ந்த விடயத்தில் ஆர்வம் காட்டினாலும் அரசாங்கம் அரசியல் எண்ண விருத்திகளிலேயே அதிகாரத்தை காட்டி வருவது மனவருத்தத்தை தருகின்றது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்திய தூதுவராயலத்தின் துணைத்தூதர் சு. தட்சணாமூர்த்தி, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .