2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'தென்னிலங்கை தடுப்பு முகாமில் எனது சகோதரன் இருந்தார்'

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த்


எனது சகோதரனும் மருத்துவ பீடத்துக்கு தெரிவாகிய மாணவனுமாகிய கோபாலசிங்கம் கஜேந்திரன் தென்னிலங்கையிலுள்ள தடுப்பு முகாமில் இருக்கும் போது பிடிக்கப்பட்ட புகைப்படம் தம்மிடம் இருப்பதாக அவரது சகோதரி ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் காண்பித்தார்.

காணாமற்போனாரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கை பூநகரி பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்றது.

இதன்போதே மேற்படி பெண் சாட்சியமளித்தார், அவர் தொடர்ந்து கூறுகையில்,

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி எனது சகோதரன் பூநகரியிலுள்ள எமது வீட்டிலிருந்து வட்டுவாகலில் அமைந்துள்ள எங்களது சித்தியின் வீட்டுக்கு சென்றிருந்தார்.

அதனை தொடர்ந்து எங்களுக்கும் சகோதரருக்கும் தொடர்புகள் அற்றுப்போயிருந்தன. இதன்பிறகு எமது சித்தியும் சித்தப்பாவும் அவர்களது ஒரு பிள்ளையும் nஷல் வீச்சில் பலியாகியிருந்தனர்.

இதனையடுத்து, எனது சகோதரர் சித்தியுடைய மிகுதி 3 பிள்ளைகளையும் வேறு சில தெரிந்தவர்களையும் அழைத்துக்கொண்டு ஓமந்தை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி வந்துள்ளார்.

அத்தருணத்தில் எமது சகோதரனை ஒரு பஸ்ஸிலும் அவருடன் வந்த மற்றவர்களை வேறு பஸ்ஸிலும் இராணுவத்தினர் ஏற்றினார்கள்.
மற்றவர்கள் எங்களுடன் வந்து சேர்ந்துவிட்ட நிலையில், எமது சகோதரனை காணவில்லை. தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இணையத்தளம் ஒன்றில் எமது சகோதரன் இருக்கின்ற புகைப்படம் வெளியாகியது.

அப் படம் தென்னிலங்கையிலுள்ள தடுப்பு முகாமில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தும், எமது சகோதரன் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .