2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமே வெற்றி அளிக்கும்: ஆனந்தன் எம்.பி

Thipaan   / 2014 செப்டெம்பர் 30 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமே வெற்றி அளிக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இன்று (30) தெரிவித்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வவுனியா மதுராநகர் கிராம அபிவிருத்திச்சங்கத்துக்கு தளபாடங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையினதும் சர்வதேச சமூகத்தினதும் அழுத்தங்களை முன்னெப்போதும் இல்லாதவாறு சந்தித்துள்ளது.
குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தில் நடத்திய படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிப்பதிலும், பொறுப்புக்கூறுவதிலிருந்தும் இலங்கை அரசு அவ்வளவு இலகுவில் விலகியிருந்து விட முடியாது.

அதேவேளை, காலம் கடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஐ.நா. பொறிமுறைகள் இனியும் இலங்கை அரசுக்கு வழங்காது. 

போர் முடிந்து ஐந்து வருடங்களை கடந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போன தமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தமது விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தத்தில் இழக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உயிர் உடைமைகளுக்கான நஸ்ட ஈட்டை அரசு இன்னமும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை.
மேலும் மேலும் தமிழர் நிலங்களையும் இயற்கை வளங்களையும் சூறையாடி வருகின்றது. போருக்குப்பின்னரான அபிவிருத்தி மீள் நல்லிணக்கம் என்பவற்றில் உண்மைத்தன்மை முற்றிலுமாக இல்லை.

எனவே, இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைகளுக்கும் ஏதேச்சதிகார போக்குகளுக்கும் எதிராக புலத்தில் எமது உறவுகள் கனதியான போராட்டங்களையும், நம்பிக்கை அளிக்கும் செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, நாங்கள் பார்வையாளராக இருந்து விட்டுப்போக முடியாது. சிறு எறும்பை மிதித்தால், அது மிதிப்பவரை சாகும் தருவாயிலும் பலம் கொண்டவரை கடித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியே ஆகும்.

நாம் அமைதியாக இருக்க முடியாது. தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் புலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளூரில் நாமும் பக்கபலமாக காத்திரமான ஜனநாயக போராட்டங்களை விரைவுபடுத்த உள்ளோம்.

ஜனநாய போராட்டங்களின் வெற்றி மக்கள் எழுச்சியிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்களான ராஜேசேகரம், பரமேஸ்வரன், பார்த்தீபன் ஆகியோரும், கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள், கிராம விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள், கிராம மக்களும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .