2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மைத்திரிக்கு நன்றியுடையவர்களாக வடமாகாண மக்கள் இருக்கவேண்டும்: சத்தியலிங்கம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண மக்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம், தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிப்பு மையம், இளையோர் நேய சுகாதார நிலைய திறப்பு விழா சனிக்கிழமை (6) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு  கூறினார்.

இங்கு  அவர்   மேலும் உரையாற்றுகையில்,

'வவுனியா பொதுவைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தபோது, முன்னாள் சுகாதார அமைச்சரான  மைத்திரிபால சிறிசேன ஒரு யோசனையுமின்றி உடனடியாக எமது ஒதுக்கீட்டை கேட்டு  8.5 மில்லியன் ரூபாவை  ஒதுக்கியிருந்தார். அவர் இன்று சுகாதார அமைச்சராக இல்லாவிட்டாலும், எமது மாகாண மக்கள் அவருக்கு நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்கின்றோம். நானும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

மாகாண வைத்தியசாலைகளில் இன்று முதன்முதலாக சிறுநீரக குருதி சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைக்கின்றோம். இலங்கையில் அநுராதபுரத்துக்கு அடுத்ததாக சிறுநீரக நோயாளர்களை கூடுதலாக கொண்டதொரு மாவட்டமாக வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது. அடுத்ததாக, முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.  ஆகவே,  நாங்கள் வவுனியா வைத்தியசாலையில் இவ்வாறான சிகிச்சை நிலையத்தை அமைத்தததன் மூலம் குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த சிறுநீரக நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் பயன்பெறக்கூடியதாக உள்ளது.

இதுவரைகாலமும் இங்கிருந்த நோயாளார்கள் கண்டி, அநுராதபுரம், கொழும்பு ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தனர். இனிவரும் காலத்தில்; இந்நிலை ஏற்படாது என்பது மகிழ்ச்சியான விடயமாகும். இதை விட, இச்சிகிச்சைக்காக ஒருவருக்கு தனிப்பட 3,000 முதல் 3,500 ரூபாய் வரையில் பில்டர் வாங்குவதற்கு செலவு செய்யவேண்டியுள்ளது. இவ்வாறு தான் அரச வைத்தியசாலைகளிலும் செய்துவருகின்றனர்.

எனினும், வவுனியா வைத்தியசாலையை நாடி வருபவர்களில் வறுமையானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு அதனை இலவசமாக செய்வதற்கு நிதி தேவைப்பட்டது. அதனை வடமாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பெற்று தந்திருந்தார். அதனை நாம் வவுனியா பொது வைத்தியசாலை கணக்கில் 25 இலட்சம் ரூபாவாக வைப்பிலிட்டுள்ளோம்.

இதேவேளை, எமது மக்கள் பயன்பெறும் வகையில் 2015ஆம் ஆண்டு ஒவ்வொரு மாவட்ட வைத்தியசாலைகளிலும் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்படும் என்பதை உறுதியாக கூற விரும்புகின்றேன்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .