2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணியை இராணுவம் அபகரிப்பதாகக் கூறி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் கிராமத்தில் 12 ஏக்கர்; காணியை இராணுவத்தினர் அபகரிப்பதாகக் கூறி, அக்கிராம மக்கள்  சனி (06),  ஞாயிறு (07)  ஆகிய தினங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டியாபுளியங்குளத்தில் விளையாட்டு மைதானம், ஆரம்ப பாடசாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக பிரதேச செயலாளரினால் இக்காணி   ஒதுக்கப்பட்டிருந்தது.

இக்காணியை  மேற்படி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை (5)  துப்பரவு செய்யமுற்பட்டபோது அங்கு  பிரசன்னமாகிய இராணுவத்தினர்,  இக்காணி   தமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துப்பரவுப்பணியை நிறுத்துமாறும் மக்களுக்கு பணித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இராணுவத்தினர்  சனிக்கிழமை (06); அக்காணியை சுற்றி வேலி அமைக்கமுற்பட்டபோது,  கிராம மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இராணுவ அதிகாரிகள் கலந்துரையாடி எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், பொலிஸார் சமரசம் செய்ய முற்பட்டனர். இருப்பினும்,   அதுவும் பயனற்றுப்போக ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்று சனிக்கிழமை (06) மாலை நிறைவடைந்தது.

இந்நிலையில், எவரும் அறியாத வகையில் சனிக்கிழமை (06) இரவு இராணுவத்தினர் அக்காணியை சுற்றி வேலி அமைத்ததாகவும் அதிகாரிகள் உட்பட அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (07) மன்னார் மதவாச்சி வீதியில் மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரினர். இருப்பினும், எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதிக்கு பிரதேச செயலாளர் வருகை தந்து காணியை பார்வையிட்டதுடன், இராணுவத்தினருடனும் கலந்துரையாடினார்.

காணி மக்களின் தேவைக்காக ஒதுக்கப்பட்டமைக்கான பத்திரங்களை தமக்கு காண்பிக்குமாறு இராணுவத்தினர் கோரினர். பிரதேச செயலாளர்,  ஆவணங்களை பிரதேச செயலகத்திலிருந்து எடுத்துவந்து இராணுவத்தினருக்கு காண்பிக்க நடவடிக்கை எடுத்த நிலையில்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்று குழுமியிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிரதேச செயலாளர் காணி தொடர்பான ஆவணங்களை இராணுவத்தினருக்கு காட்டியதையடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் இது தொடர்பான தீர்வை பெற்றுத்தருவதாக பிரதேச செயலாளர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அடுத்து, ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை  மதியம் கைவிடப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .