2025 ஜூலை 14, திங்கட்கிழமை

எனது சகோரதனை புலிகள் பிடித்துச் சென்றனர்: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

தனது சகோதரனை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றனர் என்று  வவுனியா, மகாசியம்பலாகஸ்கட என்ற இடத்தை சேர்ந்த எம்.கமர்தீன் என்பவர் சாட்சியமளித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில்  விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்   விசாரணைகள் வவுனியா,  செட்டிகுளத்தில்  ஞாயிற்றுக்கிழமை (14) ஆரம்பமாகியுள்ளன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

'அப்துல் மஜீத் என்ற 25 வயதான எனது சகோதரன் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி இரவு ஒரு  மணியளவில்  புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டார். அந்தவேளை,  நான்  வீட்டின் பின்புறத்தால் ஓடி ஒழித்து நடப்பதை பார்த்தேன்.

பின்னர், விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் செல்வதற்கு  பயத்தினால்  எனது சகோதரனின் நிலை தொடர்பாக விசாரிக்கவில்லை.

 எமது கிராமத்தில் இருந்த 10 பேர் வரையில் அவர்கள் பிடித்துச் சென்றிருந்தனர். அவர்களின் உறவினர்களும் இன்று சாட்சியமளிக்க வந்துள்ளனர்'  எனத் தெரிவித்தார்.

இதேவேளை, சிவராத்திரிக்கு கோவிலுக்குச் சென்ற தனது கணவரை இராணுவ புலனாய்வு பிரிவினரே கூட்டிச்சென்றனர் என்று    துரைசிங்கம் கலாவதி என்பவர் சாட்சியமளித்தார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

'எனது கணவரும் எனது சகோதரியின் மகன்; ஒருவரும் சிவராத்திரி பூசைக்காக எமது வீட்டிலிருந்து கோவிலுக்குச் சென்றதாகவும்  இவ்வேளையில்,  இவர்கள் சென்ற வீதியிலுள்ள  மின்விளக்குகள் ஒளிராமல்  காணப்பட்டது. அப்போது பற்றையினுள் மறைந்திருந்த சிலர், எனது கணவரின்; பெயரை கூறி அழைத்திருந்தனர். சற்று நேரத்தில் நால்வர் அங்கு வந்து, எனது கணவரின் காதினுள் ஏதோ கூறி அவரை கூட்டிச்சென்றனர்.

அன்றிலிருந்து அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. கணவர் காணாமல் போவதற்கு முன்னரும் பின்னரும் எமது வீட்டை இராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணித்துவந்திருந்தனர்.

எனது வீட்டை சோதனை செய்யவேண்டும் எனவும் வீட்டினுள்; வந்து அறைகளை திறந்துவிடுமாறும் இராணுவத்தினர் கோரியிருந்தனர்.  ஆனால்,  வீட்டினுள் நான் போகாமல்,  திறப்பை கொடுத்து சோதனை செய்யுமாறு கோரினேன்.

பின்னர்,  இவரை கூட்டிச்சென்றவர் தொடர்பில் நான் அறிந்துகொண்டேன்.  அவர் தந்திரிமலை இராணுவ முகாமைச் சேர்ந்த துசார என்ற பெயருடைய புலனாய்வுத்துறையை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.  எனது கணவர் காணாமல் போன சமயம்,  துசார என்ற அதிகாரியை நான் சந்திக்க முற்பட்டபோது அவர் என்னைச் சந்திக்கவில்லை.

கிராமிய அபிவிருத்திச் சங்கத்திலிருந்த எனது கணவர், பொது வேலைகளை ஆர்வமாகச் செய்துவந்தவர். இதன் காரணமாக குறித்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே எனது கணவரை கடத்திச் சென்றனர்' என அவர்  சாட்சியமளித்தார்.

இதேவேளை,  சிவில் உடையில் வந்த சிலரே எனது மகனை வெள்ளை வானில் மதியம் 12.45 மணிக்கு கடத்திச் சென்றனர் என்று காணாமல் போனவரின் தந்தையான  எஸ்.அருளானந்தம்  சாட்சியமளித்தார்.


தொடர்ந்து அங்கு சாட்சியமளித்த அவர்,
செட்டிகுளம், மாங்குளம் பாடசாலையில் தனியார் வகுப்பை முடித்துவிட்டு சைக்கிளில் வீதியால் வந்தபோது, நொச்சிக்குளத்தில்  சிவில் உடையில் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டதை அவரிடம் கற்கும் மாணவர்கள் நேரில் கண்டு கத்தியவாறு வீட்டுக்கு வந்து எமக்கு அறிவித்தனர். எனினும், அவர்கள் வீரபுரத்தினூடாக வானில் எனது மகனையும் ஏற்றிச்சென்றனர்.

இது தொடர்பில் நாம் செட்டிகுளம் பொலிஸிலும் வவுனியா ஜோசப் முகாமிலும் முறையிட்டிருந்தோம். அதன் பின்னர் இராணுவத்தினர் வீட்டுக்கு வந்து விசாரணைகளை செய்தனர். ஆயினும், இதுவரை மகன் வரவில்லை என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .