2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றில் இருந்த எனது மகனை கருணா குழுவே கடத்தியது; தந்தை சாட்சியம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தொழில் நிமித்தம்; அக்கரைப்பற்றில் தங்கியிருந்த தனது மகனை கருணா குழுவே கடத்தியது என்று காணாமல் போனவரின் தந்தையான கந்தையா சங்கரப்பிள்ளை சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில்  விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு   வவுனியா,  செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (15)  நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

இங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

'எனது மகன்  2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமல் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே, எனது மகனை அவர்களே கடத்தியிருக்கவேண்டும்.  செட்டிகுளம், மெனிக்பாமில் கிராமத்தில் நான் வசித்து வருகின்றேன்.  எனது மகன் வேலைவாய்ப்புக்காக அக்கரைப்பற்றில் தங்கியிருந்த சமயம்  2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் போனார்' எனக் கூறினார்.

இதன்போது, 'அக்கரைப்பற்று யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?' என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர். 'அதற்கு, கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது' என அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, கருணா வடபகுதியில்தானே இருந்தார் என்று ஆணைக்குழுவின் தலைவர் கேட்க, 'இல்லை. அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்தார்.  அங்கு முகாம்களை அமைத்து அவர்கள் தங்கியிருந்தனர். அந்த காலப்பகுதியில் எனது மகன் காணாமல் போனார்.

எனவே, கருணா குழுவினரே எனது மகனை கடத்தியிருக்கவேண்டும். காணாமல் போன எனது மகனுக்கு எப்படி மரணச் சான்றிதழ்; பெறமுடியும்?' என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .