2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குஷ்டரோக நோயாளி நிலையில் த.தே.கூ: டக்ளஸ்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும், குஷ்டரோக நோயாளியைக் கண்டு ஒதுங்குவதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஒதுக்கி வைத்துள்ளனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் தாழ்வுப்பாடு வீதியில் அமைந்துள்ள ஆஷ் ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

'நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிக்குமாறு ஆளும் கட்சி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

வடமாகாண மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பினரின் சுயலாப செயற்பாடுகளாலும் தமிழ் மக்கள் மீதான அவர்களின் அக்கறையின்மையாலுமே இந்தத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நிராகரித்துள்ளதாக' தெரிவித்தார்.

'தமிழ் பேசும் மக்களின் துயரைத் துடைத்துள்ள ஒரு அரசியல் தலைவரென்றால் அது மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாத்திரமே. மத்திய அரசாங்கத்திலிருந்த கடந்த காலத் தலைமைகள் தமிழ் பேசும் மக்களிடம் மாற்றாந்தாய் அணுகுமுறையையே மேற்கொண்டிருந்தனர்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

'தற்போதைய ஜனாதிபதி, இந்த நிலைமையை மாற்றி யுத்தத்தினால் பின்னடைவை எதிர்நோக்கியிருந்த எமது வடமாகாணத்தை குறுகிய காலத்தில் மீளமைத்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் தமிழர்களின் அநேகமான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படுவாராயின் அவர் 'அ'லிருந்து மீண்டும் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டி வரும். இதற்கு நீண்ட காலமெடுக்கும். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கான முழுமையான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்' எனவும் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த உரையாற்றும் போது, 'நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாம் மன்னார் மாவட்டத்திலும் அதிக வாக்குகளைப் பெறுவோம் என்பதை அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.

'இந்த மாவட்ட மக்களின் சார்பில் அரசாங்கத்துடன் முதலில் இணைந்திருந்தவர்கள் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் துரோகமிழைத்துள்ளனர் என்பது தற்போது தான் தெரிய வருகிறது. ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து அவர்களின் ஊடாகவே மக்களுக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.

தற்போது அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற எவரும் அரச அதிகாரிகள், ஊழியர்களை இடமாற்றவோ, பதவி நீக்கம் செய்யவோ, அவர்களின் பதவி நிலையில் மாற்றங்களை மேற்கொள்ளவோ முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த், அவர்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது, மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும் மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்தே முன்னெடுக்கப்பட்டன. அவர்களின் சொந்த நிதியில் இருந்து அல்ல என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரக் கூட்டங்களிற்கு வரும் போது வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதாகவும், இம்முறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டிலான இன்றைய கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிப்பதுடன், ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதை இந்த மக்கள் கூட்டம் எடுத்துக் காட்டுவதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

இதன்போது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், பிரதி அமைப்பாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.

You May Also Like

  Comments - 0

  • Iyer Thursday, 25 December 2014 10:40 AM

    தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்

    Reply : 0       0

    Iyer Thursday, 25 December 2014 10:40 AM

    தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்

    Reply : 0       0

    arvainth Friday, 26 December 2014 04:02 AM

    Jaffna election results will show the power of tamils

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .