2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குஞ்சுக்குளம் கிராம மக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்: ஆனந்தன் எம்.பி.

Thipaan   / 2015 மே 13 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் குஞ்சுக்குளம் தொங்கு பாலம் சேதமடைந்துள்ள நிலையில், அதனூடாக ஆபத்தான பயணத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததார்.

குஞ்சுக்குளம் கிராமத்துக்;கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) சென்ற நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆனந்தன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

குஞ்சுக்குளம் கிராமத்துக்கான ஒரேயொரு பிரதான தரை வழிப்பாதையை 10 அடிக்கும் மேலாக வெள்ளம் நிரப்பி பாய்வதால், கிராம மக்கள் வேறு வழியின்றி சேதமடைந்துள்ள தொங்குபாலத்தை தமது போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

மல்வத்துஓயா ஆற்று நீர் பெருக்கெடுத்து பாய்வதனால், நடைபெற்றுக் கொண்டிருந்த புதிய கொங்கிறீட் பாலத்தை அமைக்கும் கட்டுமானப்பணிகளும் தாமதமடைந்துள்ளன.

ஆற்றுநீர் பெருக்கெடுத்து பாயாத காலங்களில் குறைந்தளவான தொழிலாளர்களை கொண்டு மந்த கதியில் கட்டுமானப்பணிகள் இடம் பெறுவதாலேயே பாலம் அமைக்கும் பணிகள் நீண்டகாலமாக முடிவுறுத்தப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றம் தெரிவிக்கின்றனர்.

பாலத்தை அமைக்கும் பணியை பொறுப்பேற்றுள்ள ஒப்பந்த தாரர் ஆற்றுநீர் வற்றியிருக்கும் காலத்தில் ஆளணியினரை அதிகப்படுத்தி துரிதகதியில் கட்டுமானப்பணிகளை முடிவுறுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குஞ்சுக்குளம் கிராமமானது பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கிராமம் ஆகும். வருடா வருடம் மல்வத்து ஓயா பெருக்கெடுப்பதனால் இக்கிராமத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதிகளின்றி இம்மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு இறுதியிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உலங்குவானூர்திகள் மூலமாக இக்கிராம மக்களுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டுமான பணியை பொறுப்பேற்றுள்ளவர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நீர் வற்றியிருக்கும் காலத்தில் விரைவாக வேலைகளை முடித்தி பொதுமக்களின் இலகுவான போக்குவரத்துக்கு வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அதற்கு முன்னர் மிகவும் சேதமடைந்துள்ள தொங்குபாலத்தை அவசரமாக திருத்தம் செய்து பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஆனந்தன் எம்.பி கோரியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .