2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'வன்னி முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்'

Gavitha   / 2015 மே 18 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வன்னி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என முல்லைத்தீவில் இயங்கும் சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

1990ஆம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக வன்னி மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்து வந்தனர். பின்னர் யுத்த நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நாட்டில் சமாதானம் ஏற்பட்டது.  வன்னி முஸ்லிம்கள் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்ற நோக்கத்துக்காக தமது சொந்த மண்ணுக்கு சென்றனர்.

எனினும், அங்கு வாழ்வதற்கு நிரந்த காணி, வீடு இல்லாமையினால் ஒரு குறிப்பிட்ட குடும்பங்களே தமது சொந்த பூர்வீகங்களில் குடியேறியுள்ள போதிலும் ஏனையவர்கள் தாம் முன்னர் வசித்து வந்த மாவட்டங்களிலேயே இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே, அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமிங்கவிடம் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும் காணியின் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. இது குறித்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் காணியில்லாதவர்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, அண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலமையிலான குழுவினருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெறும் பேச்சளவில் மாத்திரமின்றி, அவர்களுக்கு மறுக்கப்படும் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் தமது சொந்த மண்ணில் கௌரவமாக மீள்குடியேற வேண்டும் என்று ஆசையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அவதானம் செலுத்தி அவசரமாக நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், மன்னார் முசலிப்பிரதேச சபைக்குட்பட்ட மறிச்சிக்கட்டி கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக தலையிட்டு அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்து அந்த மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .