2025 ஜூலை 16, புதன்கிழமை

2ஃ3 பங்கு மக்களுக்கான வீட்டுத்தேவை பூர்த்தி: ரூபவதி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கான வீட்டுத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.

யூ.என்.கபிரேட் நிறுவனத்தால் வடக்கு, கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கிளிநொச்சி நண்பர்கள் விடுதியில் வியாழக்;கிழமை (18) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவட்ட செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி மீள்குடியேற அனுமதியளிக்கப்பட்டது. மீள்குடியேறிய மக்களுக்கு முக்கிய பல தேவைகள் இருந்தன.

அவர்களின் பாதுகாப்பு, வீடுகளின் தேவை முதன்மை பெற்றிருந்தது. புள்ளி விபரத்தகவல்களின் அடிப்படையில் 33 ஆயிரத்து 79 குடும்பங்களுக்கு (பகுதி திருத்தவேண்டிய வீடுகள் உள்ளடங்கலாக) வீடுகள் தேவையாகவிருந்தன.

இவற்றில் 14 ஆயிரத்து 171 புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன், 2 ஆயிரத்து 465 வீடுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நெப் திட்டம், ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம், தேசிய வீடமைப்பு அதிகார சபை, மீள்குடியேற்ற அமைச்சு, இந்திய மாதிரி வீட்டுத்திட்டம், நோர்வே அரசாங்கம், சர்வோதயம், இலங்கை செஞ்சிலுவை சங்கம், இந்திய வீட்டுத்திட்டம் ஆகியவற்றின் உதவியுடனே மேற்படி வீடுகள் அமைத்தல் மற்றும் அமைக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் யூ.என்.கபிரேட் நிறுவனத்தின் அதிகாரிகள் கருத்து கூறுகையில்,
 
ஒப்பந்தங்கள் மூலம் யுஎன்.கபிரேட் நிறுவனத்தால் வடக்கு கிழக்கில் 32 ஆயிரம் வீடுகள் அடுத்தவருடம் (2015) டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து கொடுக்கப்படும்.

யுஎன்.கபிரேட் நிறுவனத்தால், அவுஸ்திரேலிய அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் இந்திய வீட்டுத்திட்ட வீடுகள் இவ்வாறு அமைத்துக்கொடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் தற்போது 18 ஆயிரம் வீடுகள் இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்கள்.

அத்துடன், மேலும் 4 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .