Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சேவைச் சந்தியில், நேற்று (24) இரவு, 38 38 மரக்கறி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அச்சந்தை மரக்கறி வியாபாரிகளால், இன்று (25) காலை, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபை தவிசாளரால், நேற்று (24) பிற்பகல் 3 மணிக்கு, கிளிநொச்சி சந்தையில் உள்ள மரக்கறி வியாபாரிகள் 48 பேருக்கும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, நேற்று முற்பகல் 11 மணிக்கு வாய்மொழி மூலம் சந்தை காப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவித்தல் திடீரென அறிவிக்கப்பட்டதால், அக்கூட்டத்துக்கு, 38 வியாபாரிகளால் செல்லமுடியவில்லை. இதனால், சேவை சந்தையின் வர்த்தக சங்கத்தின் தலைவர் முன்னிலையில் சபையின் செயலாளருக்கு தவிசாளரால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக, கூட்டத்துக்கு வருகை தராத 38 வியாபாரிகளினதும் வியாபார நிலையங்களுக்கும் இரவு 8 மணியளவில் சீல் வைத்து பூட்டப்பட்டதுடன், “இந்த வியாபார நிலையங்கள் 25-08-2020 முதல் மூடப்படுகின்றன” என அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.
சந்தை வியாபாரிகள் அனைவரும் வீட்டுக்குச் சென்றதன் பின்னரே, இவ்வாறு 38 வியாபார நிலையங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்றைய தினம் (25) அதிகாலை சந்தைக்குச் சென்ற வியாபாரிகள், அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அத்தடன், இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாபாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
“சாதாரண ஒரு கூட்டத்துக்கு ஏழு நாள்களுக்கு முன் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். ஆனால் இதில் எந்த நடைமுறையையும் பின்பற்றாது, 11 மணிக்கு வாய்மொழி மூலம், பிற்பகல் 3 மணி கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு, கூட்டத்துக்குச் சமூகமளிக்காதவர்களின் வியாபார நிலையங்களைப் பூட்டுவது என்பது அநியாயமான செயல்” என, பாதிக்கப்பட்ட மரக்கறி வியாபாரிகள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.
இதன்போது அங்கு சமூகமளித்த கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், வியாபார நிலையங்களைப் பூட்டும் தீர்மானத்தை தவிசாளரின் பணிப்புக்கமைய, வர்த்தக சங்கத்தின் தலைவரின் முன்னிலையில் மேற்கொண்டதாகவும் அதனடிப்படையில் நேற்றிரவு (திங்கட்கிழமை) அறிவித்தல் ஒட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இது தமது தவறான நடவடிக்கையென்று தெரிவித்த அவர், வியாபாரிகள் மீண்டும் தங்களின் வியாபார நிலையத்தைத் திறந்து நடவடிக்கைளை மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார்.
குறித்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்த பிரதேச சபை செயலாளர், இதனால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் எழுத்து மூலமாக அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.பிரபாகரன், வியாபார நிலையங்களை திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபை செயலாளர் மற்றும் கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் வாக்குறுதிக்கமைவாக, போராட்டத்தைக் கைவிட்டு, காலை 9.30 மணிக்கு வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago