2025 மே 23, வெள்ளிக்கிழமை

அகிம்சை வழியில் கூட்டமைப்பு பேசுகின்றது

க. அகரன்   / 2019 ஜூன் 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணர்ச்சி அரசியலை செய்து மக்களை மீண்டும் வலிகளை சுமப்பவர்களாக மாற்றாமல் இருப்பதற்காகவே கூட்டமைப்பு அகிம்சை ரீதியில் பேசிவருவதாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான செ. மயூரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களாக இருந்தாலும் சரி பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்தாலும் சரி தங்களுக்கு கிடைக்கின்ற நிதியின் மூலமே வேலைத்திட்டங்களை செய்யலாம் என்ற நிலை இருந்தது. 

ஆனால் இன்று அந்த காலம் சிறிதளவாக மாற்றப்பட்டு அவர்களுக்கு கிடைக்கின்ற மேலதிக நிதிகள் ஊடாக பிரதேசத்தினை அபிவிருத்தி செய்யும் நிலைக்கு இறங்கியிருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் எதனையும் செய்யவில்லை. இனியும் செய்யப்போவதில்லை என்ற கருத்துக்கள் பலரது விமர்சனங்களில் காணப்படுகின்றது. ஆனால் நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களை எங்கள் மக்களுக்கு சரியான முறையில் சென்றடையும் வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கூறியிருக்கின்றார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இருக்கின்றது. அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் இப்போது உரிமை பற்றி பேசாது எப்போது உரிமை பற்றி பேசப்போகின்றனர் என்ற கருத்தை மக்கள் மத்தியில் முன்வைத்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமை சார்பாக தொடர்ந்தும் பேசிக்கொண்டிருகின்றது. நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடும் வல்லமை மிக்கவர்களாக இல்லை. அதனால் உரிமை ரீதியில் நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றோம். 

வவுனியா மாவட்டத்தினை பார்க்கின்றபோது தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் சிங்கள மக்கள் என மூவின மக்களும் இருக்கின்றனர். முஸ்லீம் மக்களின் வாக்குகளை பார்க்கின்றபோது அவர்களது பிரதிநிதித்துவம் என்பது ஒரு பாராளுமன்ற உறுப்பினரை மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் வன்னியில் இரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அவ்வாறெனில் அது யாரால் போடப்பட்ட வாக்கு? தமிழர்களால் போடப்பட்ட வாக்கு. 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழர்களது உரிமை பற்றி பேசாது அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருப்பதாக கூறுகின்ற நீங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராகி நான்கு ஆண்டுகள் பூர்த்தி அடையும் நிலையில் வாக்குகளை பெற்ற தமிழ் மக்களுக்காக என்ன விசுவாசத்துடன் ஜனாதிபதியிடம் பேசியிருக்கின்றீhகள்?
ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்கின்ற நீங்கள் இது குறித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அல்லது அடிப்படை வசதிகள் மலசலகூடம் தொடர்பாகவேனும் பேசியிருக்கின்றீர்களா? தெற்கிலே அபிவிருத்திகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்ற வடக்கிற்கு இனி அபிவிருத்திகளை செய்வோம் என்று ஜனாதிபதியிடம் பேசியிருக்கின்றீர்களா?
தமிழ் மக்களிடம் நீங்கள் பேசுவதையும் ஆளுமையையும் பார்த்து வெட்கப்படுகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதிலே உங்களுக்கு என்ன லாபம் இருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் தலைமையிலே இன்று தீர்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் வலிகளோடு இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் உணர்ச்சி அரசியலை செய்து மீண்டும் ஆயுதம் ஏந்தி இழப்புகளை சந்திக்கும் அரசியலை செய்ய நாங்கள் விரும்பவில்லை.

நாங்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய அரசியலை செய்தால் எத்தனை பேர் இன்றும் களத்தில் நிற்க தயாராக உள்ளனர். ஆகவேதான் நாங்கள் அகிம்சை ரீதியில் பேசிக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X