2025 மே 21, புதன்கிழமை

அக்கராயனில் பஸ் சேவை நெருக்கடி

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயனில் இருந்து பூநகரி, யாழ்ப்பாணம் வரை நடைபெறுகின்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஸ்கந்தபுரத்தில் இருந்து முக்கொம்பன் வரையான மூன்று கிலோமீற்றர் தூர வீதி கடந்த பத்தாண்டுகளாக புனரமைக்கப்படாததன் காரணமாக தற்போது குறித்த வீதி குன்றுங்குழியுமாக மாறி உள்ளது.

இனிவருங்காலம் மழை காலம் என்பதினால் ஒரு மழையுடனேயே பஸ் சேவை நடத்த முடியாதளவுக்கு வீதியின் நிலைமை உருவாகும். குறித்த பஸ் சேவை கிளிநொச்சி நகரத்தில் இருந்து நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு அக்கராயனை வந்தடைந்து, அக்கராயனில் இருந்து 1.45 மணிக்கு முக்கொம்பன் பூநகரி வழியாக யாழ்ப்பாணத்தினை சென்றடையும்.

குறித்த பஸ் மறுநாள் காலை 5.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு அதே வழித்தடத்தால் அக்கராயனை வந்தடைந்து, திருமுறிகண்டி ஊடாக பரந்தன் வரை நாள்தோறும் பணியில் ஈடுபடும்.

தற்போது இப்பணிக்கு தடையாக இருப்பது ஸ்கந்தபுரத்துக்கும் முக்கொம்பனுக்கும் இடையிலான மூன்று கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படாமை ஆகும்.

இவ்வீதியைப் புனரமைக்குமாறு கடந்த பத்தாண்டுகளாக அதிகாரிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், முக்கொம்பன் ஆகிய கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

ஆனால், வீதி புனரமைக்கப்படவில்லை. இவ்வீதியில் பஸ் சேவைகள் இடம்பெறாத சந்தர்ப்பங்களில் அக்கராயன் மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்வார்கள்.

அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் தவிர்க்க நேரிடும். தற்போது குறித்த வீதியை விரைவாக புனரமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .