2025 மே 08, வியாழக்கிழமை

அதிக விலைக்கு மணலை விற்றால் சிக்கல்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
 
மன்னார் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட விலைக்கு மணல் விற்பனை செய்யப்படாது, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், அவர்களின் மணல் அகழ்வுக்கான அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படுமென, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (16) காலை, மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போது மன்னார் மாவட்டத்தில், மணல் விலை அதிகரித்துள்ளதாக மக்களிடம் இருந்து தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில், இந்த விசேட கலந்துரையாடல் மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
 
அதன் அடிப்படையிலும், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வுக்கு அமைவாக, அவர்களால் வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையிலும் தாங்கள் தற்போது மன்னார் மாவட்டத்தில் 46 அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாகவும், அவர் கூறினார்.
 
இந்த அனுமதிப்பத்திரங்கள் இலுப்பைக்கடவை, கூராய்,  அருவியாறு, பெரியமடு, முசலி போன்ற இடங்களில் மணல் அகழ்வு செய்ய வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் ஊடாக மக்களுக்கு குறைந்த விலையில், மணல் வழங்கப்பட வேண்டும் என்பதை அறியப்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.
 
"இதன் அடிப்படையில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இடங்களுக்கு 1 டிப்பர் மணல் மண் 29 ஆயிரம் ரூபாய்க்கும், மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவில் 30 ஆயிரம் ரூபாய்க்கும், தலைமன்னார் பிரதேசத்துக்கு 34 ஆயிரம் ரூபாய்க்கும், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 32 ஆயிரம் ரூபாய்க்கும் மணல் விற்பனை செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
"குறித்த தீர்மானத்தை உரிய முறையில் அமல்படுத்துமாறு, கிராம அலுவலகர்களுக்கு பிரதேச செயலாளர்களின் கையொப்பத்துடன்   சிட்டை வழங்கவுள்ளோதோடு, மணல் அகழ்வு செய்பவர்களின் விபரங்களையும் வழங்கவுள்ளோம். எனவே, அமல்படுத்தப்பட்ட விலையை உறுதிப்படுத்தி, மணல் விநியோகிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
 
அத்துடன், அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படும் போது, தீர்மானிக்கப்பட்ட விலைக்கு மணல் விநியோகித்தார்களா என்பது தொடர்பாக ஆராயப்பட்ட பின்னரே, அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்படுவது தொடர்பாக ஆராயப்படும் என்றும், ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X