2025 மே 07, புதன்கிழமை

’இரு பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிப்பு’

Niroshini   / 2021 நவம்பர் 10 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தில் வவுனியாவடக்கு மற்றும் வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய நிலைமையில் இருப்பதாக, வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் அனர்த்த முன்னெச்சரிக்கை நிலைமை தொடர்பாக மாவட்டச் செயலக வளாகத்தில், இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான அவசரகால கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது என்றார்.

மாவட்டத்தில் ஏதாவது ஓர் அசம்பாவிதம் இடம்பெற்றால் அதிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பான தந்திரோபாயங்களை வகுப்பது தொடர்பாக இன்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்தவகையில், அவ்வாறான அனர்ததங்கள் ஏற்ப்படும் பட்சத்தில் அதனை இராணுவத்தினரின் உதவியுடன் நிவர்த்திசெய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்தகால அனர்த்த நிலைமைகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்றபோது வெங்கலசெட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளின் சில பகுதிகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், காரணம், அந்த பிரதேசங்களின் பூகோள அமைவிடம் மற்றும் வறுமை நிலை என்பன அதில் செல்வாக்கு செலுத்துகின்றது எனவும் கூறினார்.

"மல்வத்துஓயா பெருக்கெடுப்பதன் விளைவாக மன்னாரின் சில பகுதிகள் மற்றும் அதன் எல்லைப்பகுதியான வெங்கலசெட்டிகுளம் பிரதேசத்தின் சில பகுதிகள் பாதிப்படையக்கூடிய தன்மை இருக்கின்றது. அதேபோல நெடுங்கேணியில் மருதோடை, காஞ்சூரமோட்டை ஆகிய பகுதிகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய தன்மை இருக்கின்றது. அத்துடன், வவுனியா பிரதேசசெயலகப்பிரிவில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கமானது தற்போது வழிந்தோடும் தன்மையில் இருக்கின்றது. மழை வீழ்ச்சி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அதன் வான் கதவுகள் திறக்கப்படவேண்டிய நிலமை ஏற்ப்படலாம். இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். 

"அத்துடன், பாவற்குளமானது தனது முழுகொள்ளளவை எட்டும்போது அதனை அண்டிய பகுதிகளும் பாதிப்படையக்கூடிய நிலமை இருக்கின்றது. எனவே, அப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

"மாவட்டத்தில் எந்தவிதமான அனர்த்தங்கள் ஏற்படின் அதனை சமாளிப்பதற்கு மாவட்ட செயலகமும் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் தயார் நிலையில் இருக்கின்றதென்பதை தெரிவித்துகொள்கிறேன்" என்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X