2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

உலகப் படத்திலிருந்த ஈழம் அழிப்பு

Editorial   / 2017 ஜூன் 22 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டு ள்ள திருவள்ளுவர் சிலையைத் தாங்கியுள்ள உலகப்பட மாதிரியில்  எழுதப்பட்டிந்த “ஈழம்” எனும் சொல், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் அறிவித்தலையடுத்து, நேற்று (21) காலை அழிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை வளாகத்தில், கடந்த சனிக்கிழமை (17),  உலக தமிழ்ச் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை, திரைநீக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளுவரின் திருக்குறள், உலகப் பொதுமறை என்பதனால், திருவள்ளுவரின் சிலையை உலகத்தின் மீது இருப்பது போன்று, சிலை தாங்கியை வடிவமைக்க, கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் தீர்மானித்து, அதன்படி  உலக நாடுகள், கண்டங்கள், சமுத்திரங்கள் பெயர்கள் எழுதப்பட்டுச் சிலை தாங்கியும் அமைக்கப்பட்டிருந்தது. இதில், இலங்கையை அதன் மற்றொரு பெயரான ஈழம் என எழுதப்பட்டு அடைப்புக்குறிக்குள் இலங்கை என எழுதப்பட்டிருந்தது.

இதுவே, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு சர்ச்சையாக காணப்பட்டது. அதனால் செவ்வாய்க்கிழமை (20) கொழும்பில் இருந்து வருகைத் தந்திருந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்,  சிலையை அமைப்பதற்கு சபையின் வளாகத்தில் அனுமதி வழங்கிய கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளரை சென்று விசாரித்துள்ளதோடு, குறித்த “ஈழம்” எனும் சொல் இனமுரண்பாட்டை, பிரிவினையை ஏற்படுத்தும் சொல் என்றும் தனிநாட்டை பிரதிபலிக்கிறது என்றும் எனவே, அந்தச் சொல்லை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்து, திருவள்ளுவர் சிலையின் சிலைத்தாங்கியில் உள்ள “ஈழம்” எனும் சொல்லை அழித்துவிடுமாறும் தெரிவித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, பிரதேச சபை செயலாளர், கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் இறைபிள்ளையை தொடர்பு கொண்டு, “ஈழம்” எனும் சொல்லை அழித்து விடுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று (21) காலை ஏழு மணியளவில் உலக வடிவில்  அமைக்கப்பட்டச் சிலை தாங்கியில், இலங்கை மீது எழுதப்பட்டிருந்த “ஈழம்” அழிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .