2025 மே 22, வியாழக்கிழமை

எல்லை பிரச்சினை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபை, பிரதேச சபைக்கான  எல்லை பிரச்சினை வழக்கு விசாரனை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ரி. சரவணராஜா ஒத்திவைத்துள்ளார்.

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள காணிப் பகுதியை மன்னார் நகர சபை சுற்றுலா பூங்காவாக அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், மன்னார் நகர சபைக்கும் மன்னார் பிரதேச சபைக்கும் இடையில் எல்லை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டது.

குறித்த பிரச்சினை தொடர்பில், மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கோரியே, பொலிஸார் குறித்த வழங்கினை தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு, நேற்று (23) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர்  எஸ்.எச்.எம்.முஜாஹீர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் நகர சபை சார்பாக சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்கையில், மன்னார் நகர நுழைவாயிலான பாலப்பகுதி மன்னார் நகர சபைக்கு சொந்தமானது. அது மன்னார் நகர சபையில் பதிவாகியும் இருக்கின்றது.

ஆகவே, நாங்கள் இந்த பிரச்சினை தீர்வுக்கு மத்திய அரசை நாடுவது   என தங்கள் வாதங்களை முன் வைத்தனர்.

இதற்கு மன்னார் பிரதேச சபை சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி செல்வராசா டினேஷன், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகையில் 2005ஆம் ஆண்டு வெளியாகிய வர்த்தமானி அறிவித்தலில் மன்னார் நகர சபையினதும் மன்னார் பிரதேச சபையினதும் எல்லை விடயமாக மிக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லையை நிர்ணயிப்பது மாகாண சபையா அல்லது மத்திய அரசா என்ற நிலைப்பாடு ஒன்று இங்கு காணப்படுகின்றது.

13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையிலும் கூட உள்ளூராட்சி சபைகளை மாகாண சபை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்கள் பூரணமாக வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, எங்கள் பிரச்சினைகளை நாங்களே எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து தரப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசாங்கத்துக்கு நாம் தாரை வார்க்க முடியாது. ஆகவே எமக்கான பிரச்சினையை  எமது மாகாணத்துக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, மத்திய அரசாங்கம் எமக்கு தரப்பட்ட இந்த அதிகாரப் பரவலை நகர சபை தலைவர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையா? மீண்டும் மத்திய அரசையே அவர் நாடுவதில் அர்த்தம் என்ன? என்ற வாதங்களை மன்றில் முன்வைத்தார்.

இவர்களின் வாதங்களுக்கு செவிமடுத்த நீதவான் ரி.சரவணராஜா இந்த வழக்கானது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவே பொலிஸார் மன்றில் தாக்கல் செய்துள்ளனர்.

ஆகவே, இரு தரப்பினரும் இந்த எல்லை சம்பந்தமாக அப்பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதா அல்லது ஏற்படவில்லையா என்பதை அடுத்த தவணையின்போது இரு பகுதியினரும் நிரூபிக்க வேண்டும் என நீதவான் கட்டளை பிறப்பித்து, இவ்வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X