2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காணாமற்போனோர் விவகாரம்: ஜனாதிபதிக்கு 7,400 கடிதங்கள்

Gavitha   / 2017 மே 15 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

“கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடியறியும் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7,400 கடிங்களில் ஒரு கடிதத்துக்கேனும், ஜனாதிபதி பதில் அனுப்பவில்லை” என, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், விசனம் தெரிவித்துள்ளார்.

  வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெற்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

“வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டம் 80 ஆவது நாளை கடந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களில் நாங்கள் தொடர்ச்சியாக பங்கு கொண்டுள்ளோம்.  

எனினும், தமிழ் மக்களது பேராதரவைப் பெற்று ஆட்சியமைத்த இந்த தேசிய அரசாங்கம் , காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உருப்படியான எந்தப் பதிலையும் இதுவரையிலும் வழங்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.  

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டுமென கோரி, ஏழாயிரத்து 400 பொதுமக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளனர். 

 ஆனால், தகவல் அறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட, அவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்துக்கேனும், ஜனாதிபதியால் பதில் அனுப்பி வைக்கப்படவில்லை.  

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இருக்கின்றார்களா அல்லது இல்லையா என்பது தொடர்பிலான பதிலை, அவர்களின் உறவினர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.  

ஏனென்றால், அவர்கள் போராட்டத்தை நடத்துகின்ற இந்த தகரக் கொட்டகைக்குள் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது. அகோரமான வெப்பமான நிலைமை, இடைக்கிடையே கடுமையான மழை, அத்துடன் வாகனங்களின் இரைச்சல், இரவில் நுளம்புக்கடி என்பவற்றுக்கு மத்தியில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  

வயது போனவர்கள், நோயாளிகளாக இருப்பவர்கள் தமது பிள்ளைகளுக்காக சாத்வீகமான முறையில் தங்களது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். தெற்கில் இருக்கக் கூடிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது தாய், தந்தை, சகோதரர்கள் வீதியில் 80 நாட்கள் இருப்பதற்கு அனுமதிப்பார்களா..?, 

அவ்வாறு, அவர்கள் இருப்பார்களாக இருந்தால், அங்கு இருக்கக் கூடிய பௌத்த மதத்தலைவர்கள் மக்களுக்காக நீதி கேட்டு போராடுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழர்கள் என்ற ஒரு காரணத்துக்காக, தெற்கில் இருக்கக் கூடிய இந்த அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கக் கூடிய விடயமாகும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .