2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி சந்தை ஜனவரியில் நிர்மாணம்

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான கட்டத்தொகுதி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான தீயணைப்பு பிரிவு, அதற்கான கட்டடம் ஆகியவற்றை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைத்து தருவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச்சந்தை கடைத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 110க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியதுடன் பெருமளவான சொத்தழிவுகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தீயினைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இல்லாமையினால், யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினை வரவழைத்தும் இராணுவத்தினரின் உதவியுடனும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறான விபத்துக்களின் போது பயன்படுத்துவதற்கு, கிளிநொச்சி மாவட்டத்துக்கு தீயணைப்பு பிரிவினை உருவாக்கி தருமாறும் இவ்வாறு தீயணைப்பு பிரிவு இன்மையால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிட்டதாகவும் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்டஈட்டைப் பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் 3.00 மணிக்கு இலங்கை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன், கரைச்சிப் பிரதேச செயலாளர் கம்சநாதன், ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, கிளிநொச்சி மாவட்டத்துக்கு தனியான ஒரு தீயணைப்பு பிரிவு ஒன்றினையும் அதற்கான கட்டடம் மற்றும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான புதிய கட்டடத்தொகுதி என்பவற்றை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அமைத்து தருவதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்குவதாகவும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையினை நகர சபையாகவும், கண்டாவளை உப சபையினை தனியான பிரதேச சபையாகவும் மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .