2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘கட்டவும் முடியவில்லை, அடைக்கவும் முடியவில்லை’

Yuganthini   / 2017 ஜூன் 21 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தினமும் கூலிவேலை செய்து வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் எமக்கு, கடன் திட்டத்தின் கீழ், வீடுகளை வழங்கியமையால், வீடுகளைக் கட்ட முடியாமலும் கடன்களைக் கட்டமுடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக, கிளிநொச்சி – கோணாவில் - தஞ்சைநகர் பகுதியில் தங்கியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

“கடந்த 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் மீள்குடியமர்வையடுத்து, கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ், சொந்தக்காணிகள் இன்றி வாழ்ந்த 100 வறிய குடும்பங்களுக்குக் காணிகளை வழங்கி, தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முதற்கட்டமாக 25 குடும்பங்களுக்குக் கடன் அடிப்படையில், வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டன.

“இவ்வாறு வீட்டுத் திட்டங்களைப் பெற்ற மக்கள், தமக்கான வீடுகளை உரிய முறைகளில் கட்டி முடிக்காமலும் கடன்களை மீளச்செலுத்த முடியாமலும் உள்ளனர்.

“இதேவேளை, குறித்த பகுதியில் வீடுகளைக் கட்டிய பல குடும்பங்கள் தமது வீடுகளை முழுமையாகக் கட்டி முடிக்க முடியாது, அவற்றை இடைநடுவில் விட்டுவிட்டு, வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

தற்போது, இப்பகுதியில் அரைகுறையாகக் கட்டப்பட்ட வீடுகள், பற்றைக்காடுகள் மண்டிக் காணப்படுகின்றன.

“குறித்த பகுதியில், குறிப்பிட்ட சில குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றபோதும், ஆட்கள் இல்லாத பற்றைக்காடுகள் மண்டிக்காணப்படும் வீடுகளால் பெரும் அச்ச உணர்வுகளுடன் வாழ வேண்டியுள்ளதுடன், காட்டுயானைகளின் தொல்லையும் காணப்படுகின்றது” என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தங்களைப் போன்றவர்களுக்குப் பல்வேறு திட்டங்களினூடாக, மூன்றரை இலட்சம், ஐந்தரை இலட்சம், எட்டு இலட்சம் ரூபாய் என, பல்வேறு வீட்டுத்திட்டங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், அப்போதைய அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் திட்டமிட்ட செயலால், வலுக்கட்டாயமாகத் தங்களுக்குக் கடன் அடிப்படையில் வீடுகளை வழங்கி, வீட்டையும் கட்ட முடியாமலும் வருமானமின்றி கடனைச் செலுத்த முடியாமலும் துன்பப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .