2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கொக்கிளாய் மீனவர்களுக்கான தடை நீடிப்பு

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கொக்குளாய் கரைவலைப்பாட்டு உரிமம் தொடர்பான வழக்கில், பிரச்சினைக்குரிய பகுதியில் மீன்பிடிப்பதற்கான தடை, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் எஸ்.எம்.எஸ் சம்சுதீன்  இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாட்டின் உரிமை தொடர்பில்,  தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, பிரச்சினைக்குரிய பகுதியில் மீன்பிடிப்பதற்கு நீதிபதி மேலும் 14 நாட்களுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கெங்காதரன் குறிப்பிட்டார்.

நில அளவைத் திணைக்களத்தால் கோரப்பட்ட ஜி.பீ.எஸ் அறிக்கை, நீரியல் வளத் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை என்ற விடயமும் பிரதிவாதிகள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக அவர் கூறினார்.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரும் அவ்வாறான அறிக்கையை கோரியுள்ளதாகவும் தமக்கும் அந்த அறிக்கை கிடைக்கவில்லை என்ற விடயத்தை பிரதேச செயலாளரும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

இந்த அறிக்கையை விரைவில் வழங்குவதாக நீரியல்வளத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை கோரியுள்ளதாகவும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலோசனையை பெறுவதற்கும் கால அவகாசம் வழங்கியுள்ள முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான்,  இந்த வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .