2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'கோட்டாபய கடற்படை முகாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும்’

Niroshini   / 2021 ஜூலை 29 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் எமது மக்களின் காணிகளை அபகரித்திருக்கின்ற கடற்படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டுமெனத் தெரிவித்த   வடமாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமது மக்களுக்குரிய காணிகள் மக்களிடமே கையளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை கோட்டாபய கடற்படைத்தளம் அபகரித்துள்ள நிலையில்,  இன்று குறித்த காணிகள் கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றிருந்தது.

இந்த அளவீட்டு முயற்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்தக் காணிகளை மக்களுடைய சம்மதம் இல்லாமல் கடற்படை அபகரிப்பது பிழையான செயற்பாடாகும் என்றார்.

இங்கே காணிகள் மாத்திரமல்ல மக்களுடைய வாழ்வாதார வழிகள் பலவழிகளில் கடற்படையினர் முடக்கி வைத்துள்ளனர் எனத் தெரிவித்த அவர், "குறிப்பாக இந்த கடற்படைமுகாம் அரிச்சல் எனப்படுகின்ற ஒரு பிரதான வீதியை முடக்கிவைத்திருக்கின்றது. இந்த அரிச்சல் வீதிவழியே செல்லும் போது அங்கே எமது மீனவ மக்களுக்குரிய கரவலைப்பாடுகள், இறங்குதுறைகள் என்பவற்றுக்குச் செல்லலாம். தற்போது இவ்வாறு இராணுவமுகாம் அபகரித்திருப்பதால் அந்த மீனவமக்கள் இறங்குதுறைகளையோ, கரவலைப்பாடுகளையோ பயன்படுத்தமுடியாத நிலை காணப்படுகின்றது" என்றார்.


"அத்தோடு தென்னிலங்கையைச் சேர்ந்த சேர்ந்த சீனப் பிரஜை ஒருவருக்கும் இங்கே 49 ஏக்கர் அளவில் காணி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் காணியை கடற்படைக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.  இதற்கு நாம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தோம். இவ்வாறாக அவர்கள் பல வழிகளிலும் எமது மக்களுடைய காணிகளை அபகரிக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

"வட்டுவாகல் பகுதியைப் பொறுத்தவரையில் 617 ஏக்கர் காணிகளில் கோத்தாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை மறுபக்கம், கிட்டத்தட்ட 400 ஏக்கருக்கு மேல் இராணுவத்தினர் அபகரித்து அங்கு பாரிய அளவில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக வட்டுவாகல் முழுவதும் படையினர் வசமாகின்றது. இதைத் தடுக்கவேண்டும் என்பதுதான் இப்பகுதிமக்களின் கோரிக்கையாகவுள்ளது.

"வட்டுவாகல் என்பது தமிழர்களின் பூர்வீக வாழ்விடமாகும், அங்கே அமைந்துள்ள சப்தகன்னியர் கோவிலில் இருந்து சைவ இறை இசைப் பாடல்கள் மாதிரமே  கடந்த காலங்களில் ஒலிபரப்பப்படும்" என்றார்.

 

இவ்வாறான நிலையிலே இங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன் ஆகியோர் இந்த நில அளவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதெனவும், இதன்பின்னர் சம்பந்தப்பட்ட அனைவரையும் திரட்டி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட பின்னரே நிலஅளவீடுதொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் எமக்கு வாக்குறுதியளித்துளார் என்றார்.

நிச்சயமாக இந்தவிடயத்திலே எமது மக்களுக்கு நிரந்தரமானதோர் தீர்வு வேண்டும் என்றும் ரவிகரன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .