Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கேப்பாபிலவு மக்கள், தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், முல்லைத்தீவு - கேப்பாபிலவு மக்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதியன்று, கேப்பாபிலவு மக்களை, வட மாகாண முதலமைச்சர் நேரில் சென்று சந்திப்பார் என, வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.
கேப்பாபிலவு, சூரிபுரம், பிலவுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில், 259 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், போருக்குப் பின்னரான காலப்பகுதிகளில், அவர்களுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாது, தற்காலிகமாக பல்வேறு பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அந்த மக்களின் சொந்த நிலங்களை, அரச படையினர் அபகரித்து, தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், தமது சொந்த கிராமத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி, முல்லைத்தீவு - கேப்பாபிலவு மக்கள், கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதியன்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்திய வடமாகாண முதலமைச்சர், கேப்பாபிலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், உடனடியாக நிபுணர் குழு ஒன்றை நியமித்து ஆராயப்படும் என உறுதியளித்திருந்தார்.
முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக, கேப்பாபிலவு மக்கள் உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்ட நிலையில், ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர்கள் தலைமையில் குழு ஒன்றை நியமித்து, கடந்த ஏப்ரல் மாதம் குறித்த குழுவினரால் முதலமைச்சருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
நிபுணர் குழுவின் அறிக்கை, கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் கேட்ட காலஅவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள கேப்பாபிலவு மக்கள், ஜனநாயக வழியிலான கவனயீர்ப்பு போராட்டங்களை மீண்டும் நடத்துவதற்கு முயற்சித்த நிலையில், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் வாக்குறுதிக்கு அமைவாக, அந்தப் போராட்டமும் மீண்டுமொருமுறை கைவிடப்பட்டது.
எனினும் முல்லைத்தீவு - கேப்பாபிலவு மக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி சந்திக்கவுள்ள வடமாகாண முதலமைச்சர், படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களையும் பார்வையிடுவார் என வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago