2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க பொலிஸ் காவலரணை அமைக்கவும்’

Yuganthini   / 2017 ஜூன் 21 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

 

கிளிநொச்சி - அக்கராயன் ஆற்றுப் படுக்கைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதிகளிலும், தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு, இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு, அக்கராயன் பகுதி பொதுஅமைப்புகள், அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. 

அக்கராயன் அணைக்கட்டு வைரவர் கோவில் அடியிலும் ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் பிள்ளையார் கோவில் அடியிலும், காவல் அரண்களை அமைப்பதன் மூலம், அக்கராயன் அணைக்கட்டு வீதி வழியாக, திருமுறிகண்டி வீதி வழியாக வெளி இடங்களுக்கும் ஸ்கந்தபுரம் முக்கொம்பன் வீதி வழியாக யாழ்ப்பாணத்துக்கும் கொண்டு செல்லப்படும் மணலைக் கட்டுப்படுத்த முடியும் என பொதுஅமைப்புகள் தெரிவித்துள்ளன.

அக்கராயன் பொலிஸார் வழங்குகின்ற ஒத்துழைப்பின் அடிப்படையில்தான், மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த முடியும். கிளிநொச்சி அக்கராயனில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுடன் முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருப்பதன் காரணமாகவே மணல், சட்டவிரோதமான முறையில் வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதிக்குக்கூட அக்கராயன் பொதுஅமைப்புகளால் நேரடியாக மனு கையளிக்கப்பட்டும், அக்கராயனில் மணல் அகழ்வுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதன் காரணமாக அக்கராயன் குளத்தின் கீழான விவசாய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரும் அழிவை எதிர்கொள்ளும்.

அக்கராயன் குளத்தின் அணைக்கட்டில் இருந்து குறைந்தது மூன்று கிலோமீற்றருக்கு அப்பால், மணல் அனுமதிகளை மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு வழங்க வேண்டும் எனவும் பொதுஅமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .