2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு உத்தரவு

George   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நீதிமன்ற உத்தரவின் பேரில், வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், தருமபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் பகுதியில் கடந்த மாதம் கசிப்பு உற்பத்தி தொடர்பில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்த தருமபுரம் பொலிஸார், அவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து  வைக்கப்பட்டனர்.

இதில், தருமபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மகேந்திரன் (வயது 32) என்பவர் சுகயீனமுற்றதாக தெரிவித்து, வவுனியா பொதுவைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு  இம்மாதம்  3ஆம் திகதி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் உட்பட  வவுனியா சிறைச்சாலையில் ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலரின் கைகளை கட்டிவைத்து, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்கியமை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக,  அவருடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இரண்டு சந்தேக நபர்கள், கிளிநொச்சி  நீதவான் நீதிமன்றில், கடந்த திங்கட்கிழமை வாக்குமூலம் அளித்தனர்.

அதனையடுத்து, அவர்களின் சாட்சியத்தை பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டதுடன் வழகை நேற்று முன்தினத்துக்கு தவணையிட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணிக்கு சாட்சிகள் இருவரும் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தருமபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான் வழக்கு விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை, உயிரிழந்த சந்தேகநபர் ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது,  சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், கைதிகளை தாக்குவதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றில் கோரியிருந்ததாக, சாட்சிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், உயிரிழந்த நபரை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வவுனியா சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டதுடன்,  துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக  சட்டத்தரணிகள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .