2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சுண்ணாம்புக் கல் ஆய்வுக்காக ஆள்துளைக் கிணறுகள்

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஜூலை 18 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட விவசாயக் குழுத் தீர்மானங்களின்படி, கிளிநொச்சி மாவட்டத்திலே ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பூநகரி பொன்னாவெளியில், சுண்ணாம்புக் கல் ஆய்வுக்கென, 300 அடி ஆழத்தில், இருபதுக்கு மேற்பட்ட ஆள்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக, பூநகரிப் பிரதேச செயலகத்தில், இன்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொன்னாவெளியிலே, சுண்ணாம்புக் கல் அகழ்வு தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, வட மாகாண சபை உறுப்பினர் சு. பசுபதிப்பிள்ளை, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் அப்பிரதேசத்துக்குச் சென்று, சுண்ணாம்புக்கல் அகழ்வுகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இது பின்னர் பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முக்கிய விடயங்களாக ஆராயப்பட்டு அப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தென்னிலங்கையின் நிறுவனத்தின் ஊடாக, புவிச் சரிதவியல் திணைக்களத்தால், பூநகரிப் பிரதேச செயலகத்துக்குத் தகவலைத் தெரிவித்து விட்டு, 300 அடியில் இருபது வரையான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு,  அக்கிணற்று நீர் தொடர்ச்சியாக நான்கைந்து நாட்களுக்கு, இரவு பகலாக இறைக்கப்படுவதன் காரணமாக, குறித்த ஆள்துளைக் கிணறுகளில் இருந்து வெளியேறும் உவர் நீர், பொன்னாவெளியில் காணப்படுகின்ற நல்ல நிலங்களை உவர்நிலங்களாக மாற்றி வருவதாகவும் இம்முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, பூநகரிப் பிரதேச செயலாளர் ஆகியோர், நேரடியாக பொன்னாவெளிக் கிராமத்துக்குச் சென்று, நிலவர அறிக்கையைத் தயாரித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு கையளிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளத.

 பூநகரிப் பிரதேசத்திலே, உவர் அடைந்து வரும் கிராமங்களில் பொன்னாவெளி ஒன்றாகக் காணப்படுகின்ற போதிலும் மாவட்டத்துக்கு தீங்கு விளைவிக்கின்ற ஆள்துளைக் கிணறுகள் பெரும் சூழலியல் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடிய வகையில், பொன்னாவெளியில் சுண்ணாம்புக் கல் ஆய்வுக்காக அமைக்கப்பட்டமை, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .