2025 ஜூலை 19, சனிக்கிழமை

’நட்சத்திர விடுதிகளை தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்’

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளை தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மாவட்டம் தோறும் கொரோனோ வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு அரசு அவசரமாக அறிவித்துள்ளது.

அந்த அறிவித்தல்கள் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனைகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அந்த பணிமனைகள் என்ன செய்வது, எப்படி செய்வது என்று எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அனைத்து மாவட்டங்களும் அதனை செயற்படுத்தகூடிய நிலையில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே. 
அதனை செயற்படுத்தினால் நல்லது. அந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கூட தற்போது இடமில்லை. உயிர்போய் கொண்டிருக்கும் நேரத்தில் அரசானது வெறுமனே பந்துகளை மாத்திரம் எறிந்துகொண்டிருக்கின்றது. 

அத்துடன், சுகாதாரதுறையினருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் இங்கு உள்ளதா? பாதுகாப்பு கவசங்கள் உடைகள் முககவசங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக அவதானிக்க வேண்டும்.

இராணுவத்தினருக்கு வந்ததுபோல சுகாதாரதுறையினருக்கும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டால் பொதுமக்களை யார் பாதுகாக்கபோகின்றார்கள்.

தற்போது பாடசாலைகளை இராணுவத்தின் தனிமைப்படுத்தும் நிலையங்களாக அமைப்பதற்காக வேண்டுகோள் விடப்படுகின்றது. 

பாடசாலைகளில் குறுக்கு தொற்று ஏற்படுவதற்கான ஒரு நிலை இருக்கின்றது. பாடசாலைகளில் பொதுமலசலகூடங்களே காணப்படுகின்றன. 

தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் அங்கு மிகவும் குறைவு. இதனால் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

இதனாலேயே பாடசாலைகளை தனிமைபடுத்தல் நிலையங்களாக பயன்படுத்துவதற்கு மக்கள் பயப்படுகின்றார்கள்.

எனவே வடக்கு மக்களின் பயத்தை போக்கவேண்டியது சுகாதாரதுறையின் கடமை.

அத்துடன், மாவட்டத்துக்கு மாவட்டம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலையில் இன்னுமொரு மாவட்டத்தில் உள்ளவர்களை எமது மாவட்டங்களிற்கு கொண்டுவருவது தவறான முடிவாகவே இருக்கிறது. 

எனவே குறுக்குதொற்று ஏற்படாமல் தனிமைப்படுத்துவதற்கான மாற்று நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

அதற்கான ஒரே தெரிவாக நட்சத்திரவிடுதிகளை பார்க்கமுடியும். அங்கு அறைக்கு அறை தனியான குளியலறைகள் உண்டு. ஏனைய வசதிகளும் இருக்கிறன.

தற்போது நட்சத்திர விடுதிகள் அனைத்தும் பாவனையற்றே இருக்கிறன. எனவே குறித்த நிறுவனங்களுக்கு அரசாங்கம்  கொடுப்பனவுகளை வழங்கி அந்தசெயற்பாட்டை முன்னெடுக்கமுடியும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X