2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘நாடாளுமன்றில் மக்களின் தேவைகளை பேசுங்கள்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிபெற்றவர்கள் மக்களின் பிரச்சினைகளைப் பேசவேண்டுமெனத் தெரிவித்த​ சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்டத்துக்கான அமைப்பாளர் தமிழ்த்திரு அ.மாதவன், இல்லாவிடில் வீட்டில் இருக்க வேண்டிவருமெனவும் கூறினார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில், நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தரைத்த அவர், வடக்கு - கிழக்கில் பலரது நாடாளுமன்ற கதிரைகள் இல்லாமல் போயிருக்கின்றதெனவும் அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் கூறினார். 

மக்களின் பிரச்சினைகள் பல இருக்கின்றனவெனத் தெரிவித்த அவர், பல அபிவிருத்திகள் தடைப்பட்டிருக்கின்றனவெனவும் கூறினார். 

“காணாமல்போனவர்களின் பெற்றோர்கள் வீதிகளிலே இருக்கின்றனர். சிறைகளிலே தமிழ் இளைஞர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர்.
இவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால், நீங்கள் எதற்காக நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்பது எமது கேள்வியாக இருக்கின்றது” எனவும், அவர் தெரிவித்தார்.

“உங்களுடைய அற்பசொற்ப சலுகைகளுக்காகவும் அரசாங்கத்தின் கொடுப்பனவுகளைப் பெறுவதையும் நோக்கமாகக் கொள்ளாமல் மக்கள் உங்களை அனுப்பியதற்கான காரணத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

“தற்போது உங்களுக்கு பாராளுமன்றம் செல்லகூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மக்கள் உங்களை ஆதரித்திருக்கின்றார்கள். எனவே, இந்தப் பயணத்திலாவது மக்களின் தேவைகளை பேசுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். இந்த 5 வருடங்களில் மக்களின் பிரச்சினைகளை நீங்கள் தீர்க்காவிட்டால், அடுத்தமுறை நீங்கள் வீட்டில் இருக்க வேண்டிவரும் என்பதை இந்த தேர்தலின்ம மூலம் மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர்” எனவும், அ.மாதவன் கூறினார்.

எனவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி, தமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பது தமது வேண்டுகோளாக இருக்கின்றதென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .