2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

நோயாளி உயிரிழப்பு: கவனயீனம் தொடர்பில் விசாரணை

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற அவசர நோயாளி ஒருவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படாததன் காரணமாக உயிரிழந்தமை தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி - ஆனந்தபுரத்தில் இருந்து, கடந்த 18ஆம் திகதி இரவு நோயாளி ஒருவரை கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு அவருக்கு உரிய காலத்தில் சிகிச்சை வழங்கப்படாத காரணத்தால் அவர் உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பில் குறித்த நோயாளியை, சம்பவ தினத்தன்று வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்ற உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, 

“கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தங்களது வீட்டிலிருந்து குறித்த நோயாளியை கடந்த 18ஆம் திகதி 9.45 மணிக்கு அவரின் உடல் நிலையைக் கருத்திற்கொண்டு அவசர வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அங்கு ஓர் ஆண் உத்தியோகத்தர் உட்பட நான்கு பேர் கடமையில் இருந்தனர். இதில் ஒரு பெண் உத்தியோகத்தர், ஒரு கதிரையில் இருந்து கொண்டு மற்றைய கதிரையில் காலை வைத்துக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தார். 

“மற்றைய மூவரும் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். இதன்போது கொண்டு சென்ற நோயாளியை, சிகிச்சை வழங்காது வெளியேற்றி விட்டு, பாதுகாப்புக்கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை நோக்கி ‘ஏன் அவரை உள்ளே விட்டீர்கள்’ என, அவசர சிகிச்சைப்பிரிவின் கடமையில் இருந்த பெண் உத்தியோகத்தர் ஏசியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர். 

மேலும், “வெளிநோயாளர் பிரிவில் பதிவுகளை மேற்கொண்டு வெளிநோயாளர் பிரிவு வைத்தியரிடம் காட்டுமாறு, அவசர சிகிச்சைப்பிரிவு உத்தியோகத்தர் தெரிவித்தார். அதன்பின்னர், நோயால் பாதிக்கப்பட்ட நபர் இரவு 11.25 மணிக்கு அவசர சிகிச்சைக்குப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுபோதும், சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

“இவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையில் இருந்த வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்களின் அசமந்தப்போக்கே, உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது” என, உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “உயிரிழந்தவரின் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .