2025 ஜூலை 05, சனிக்கிழமை

புத்தவிகாரையை தடுப்பதற்கான கலந்துரையாடல்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி-இரணைமடு குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் விகாரை அமைக்கப்படுவதை தடுப்பதற்கான பொதுமக்கள் நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல், எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு, பரவிப்பாஞ்சான் வசந்திவாசாவில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்துக்கு அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை ஆலயத்தின் மூன்றாம் வீதியில் இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு பாரிய புத்த கோயிலாக மாற்றும் நோக்கில் மதில் அமைக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி கட்டுமான வேலைகளில் பெருமளவு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு அவசர அவசரமாக மதில் கட்டியெழுப்பும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் தனது இராணுவ மற்றும் அரச அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் மேற்படி அத்துமீறிய பௌத்த மயமாக்கல் நடவடிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கட்டமைப்பு சார் இன அழிப்பை மேற்கொள்வதன் மூலம் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் கடந்த ஏழு தசாப்தங்களாக தீவின் வடக்கு கிழக்கில் எல்லைக் கிராமங்களில் தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளது.

தற்போது தமிழர் தாயகத்தின் வடக்கு பிரதேசத்தின் இதயப் பகுதியாகவும், முழுமையாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியாகவும் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுப் பிரதேசத்தில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை அழித்து பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்தி படிப்படியாக சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் இராணுவக் குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர்களது சனத்தொகை பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கிலும் மேற்படி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்களின் உணர்வுகளை கணக்கிலெடுக்காது, தமது மேலாதிக்க மனோபாவத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இந்த ஆக்கிரமிப்பு. ஆட்சிகள் மாறிய போதும் சிங்கள தேசத்தின் அணுகுமுறை மாறுவதில்லை என்பதை இது மீண்டும் எமக்கு எடுத்துரைக்கிறது.

இராணுவத்தினரை பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும்  வகையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் இனவழிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமான மேற்படி பௌத்த கோவில் அமைக்கும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ள இரணைமடுக்குளத்தை சிங்கள ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம் ஒட்டுமொத்த கிளிநொச்சி மாவட்டத்தையும் சிங்கள மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்த அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக ஓரணியில் திரள வேண்டிய தருணம் இதுவாகும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .