Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 28 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
'வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையம், வடக்கு நோக்கி நகர்ந்து, மாங்குளம் அல்லது ஓமந்தை பகுதியிலேயே நிர்மாணிக்கப்படல் வேண்டும். அதற்காக நாம், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில், கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
'வடமாகாணத்துக்கு என அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம், வடக்கு நோக்கியே நகர்த்தப்பட வேண்டும். அதுவே எமது இருப்பையும் தக்கவைக்க உதவும். இன்று தென்பகுதியில் தம்புளை பொருளாதார மத்திய நிலையம் காரணமாக, எமது வடபகுதி வளங்கள் தென்பகுதி நோக்கி நகர்ந்து சென்றுள்ளன. எமது மக்கள் தம்புளைக்குச் சென்று, தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
இந்நிலையில், வடபகுதிக்கென பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ள நிலையில், அது வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் மையப்படுத்தியதாக மாங்குளம் பகுதியிலேயே அமையப்பெறுவது சிறந்ததாகும். அதுவே வடக்கு - கிழக்கின் மையம். வடபகுதியின் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து எமது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், மீன்பிடிப்பாளர்கள், வர்த்தகர்கள் என பலரும் வந்து செல்ல இலகுவான பகுதி ஆகும். வடமாகாண சபையின் செயற்பாடுகள் கூட எதிர்காலத்தில் மாங்குளத்தை மையமாகக்கொண்டே அமையப்பெறவுள்ளன.
முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் காலப்பகுதியில் கூட, மாங்குளமே வடக்கு - கிழக்கின் மையமாக விளங்கியிருந்தது. வடக்குக்கான பொருளாதார மையம் இது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆனால், வவுனியா மக்கள் அதனை தமது பகுதிக்கு வரவேண்டும் என விரும்புவது தவறல்ல. அது தான் அவர்களது விருப்பமாக இருந்தால், இந்த மையத்தை வடக்கு நோக்கி நகர்த்தி, ஓமந்தையில் அமைப்பது தான் சிறந்தது. அதன் மூலம் ஓமந்தைப் பகுதியை உபநகரமாக அபிவிருத்தி அடையச் செய்யமுடியும். எமது நிலங்களையும் பாதுகாக்க அது உதவும்.
எமது எதிர்கால இருப்பையும் அபிவிருத்தியையும், மண்ணையும் பாதுகாக்கும் வகையில் அபிவிருத்திகள் அமைய வேண்டும். அதற்கேற்ப நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில், வடக்கு முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்.
வடக்குக்கான திட்டத்தை அவரது விருப்பத்தின்படி அமைக்க வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே, வடக்கு மாகாண முதல்வருக்கு, பொருளாதார மத்திய நிலைய விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி எமது மக்களுக்கான பொருளாதார வளத்தை பெற்று அபிவிருத்தி நோக்கி நகர அனைவரும் உதவவேண்டும்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago