2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய தவிசாளராக இஸ்ஸதீன் தெரிவு

Niroshini   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்கள் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் தனது மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியையும் உறுப்பினர் பதவியையும் இழந்த நிலையில், மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கான தெரிவு இன்று  (29) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில், மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இத்தேர்தலில், 21 உறுப்பினர்களில் ஒருவர் சபையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 20 உறுப்பினர்கள் மத்தியில், தவிசாளருக்கான தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் 06 உறுப்பினர்களும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 02 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி கட்சி சார்பில் 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 01 உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 02 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினரும் மொத்தம் 20 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர்.

இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த   உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு   உறுப்பினர் ஜே.ஈ. கொன்சல் குலாஸ்,   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்  என். செபமாலை பீரீஸ் ஆகியோர் தவிசாளருக்கான போட்டியில் போட்டியிட்டனர்.

இதில் முதல் சுற்றில் நடைபெற்ற திறந்த போட்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ் 08 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரீஸ் 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று போட்டி இடம்பெற்றது. இதில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் மற்றும்   தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேசாலை உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ் ஆகியோருக்கு  இடையே நடைபெற்றது.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 06 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 01 உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 01 உறுப்பினரும், ஈ.பி.டி.பி சட்சி சார்பில் 01 உறுப்பினரும் வாக்களித்ததில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எருக்கலம் பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன்  09 வாக்குகளை பெற்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 01 உறுப்பினரும் வாக்களித்ததில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட  உறுப்பினர் ஜே.ஈ. கொன்சன் குலாஸ்  08 வாக்குகளை பெற்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சேர்ந்த 02 உறுப்பினர்களும் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் 09 வாக்குகளைப் பெற்று, ஒரு மேதிக வாக்கால்  மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X