2025 மே 19, திங்கட்கிழமை

’பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே சமஷ்டி குண்டு வெடித்துள்ளது’

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்கும் என்ற வெடிகுண்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெடிக்க வைத்துள்ளாரென, சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, பேரம் பேசலுடன் பெறுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதும், அவை அனைத்தையும் கோட்டைவிட்டு, கடந்த ஆட்சியாளர்களுடன் சரணாகதியடைந்து, நான்கு வருடங்களாக நிஷ்டையில் இருந்து விழித்தவர் போன்று, தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார் என்றும், ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் அதில், போர் நிறைவுக்கு வந்த பின்னர், போரின் வலிகளையும் இழப்புகளையும் சந்தித்த மக்கள் மீது, சர்வதேசச் சமுகம் அதீத கரிசனை கொண்டிருந்தது என்றும் இச்சமயத்தில், தமிழ் மக்களும் தமது பூரண ஆணையைக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தார்கள் போதிலும், சர்வதேச சமுகத்தையும் அயல் நாடான இந்தியாவையும் முறையாகப் பயன்படுத்தி, உரிய நகர்வுகளைச் செய்வதற்கு சம்பந்தன் விளைந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இராஜதந்திர அணுகுமுறை ஊடாக, அனைத்தையும் அணுகின்றோம் என்று கூறி வந்திருந்த போதும், அவை அனைத்துமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைப்பதற்கான இலக்காகவே இருந்துள்ளது என்பது தான் யதார்த்தமாகும்.

“தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதையெல்லாம் வெறும் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் வார்த்தைகளாகவே, தேர்தல் விஞ்ஞபனங்களில் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில், பெரும்பான்மையிடம் மண்டியிட்டு அனைத்துத் தந்திரங்களும் கைநழுவி, அடுத்தகட்ட இருப்பே கேள்விக் குறியாகியுள்ள நிலையில், தற்போது சர்வதேச ஆதரவுடன் சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று மீண்டும் ஒரு புனைகதையொன்றையே சம்பந்தன் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

“தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு இணைப்பே நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகின்ற நிலைமையை அறிந்தும் கண்ணயர்ந்திருக்கும் சம்பந்தன், தற்போதைய சூழலில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையில் இருந்து அரசியல் தீர்வு வரை, இவர்களால் ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாத நிலைக்கு, தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்” என்றும், சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X