2025 ஜூலை 16, புதன்கிழமை

’போராடிப் பெற்றதால் உதவிகள் கிடைக்கவில்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“நிலங்களைப் போராடிப் பெற்றதால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை” என முல்லைத்தீவு - கேப்பாப்புலவு -பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள பிலக்குடியிருப்பு பகுதியில், விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த பெப்ரவரி  28ஆம் திகதி வரையான ஒரு மாத காலம் விமானப்படையினர் முகாம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மார்ச் மாதம் 85 குடும்பங்களுக்கு சொந்தமான 42.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, அக்காணிகளில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு மீள்குடியேறிய குடும்பங்கள், ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், தாங்களாக அமைத்துக்கொண்ட தற்காலிக கொட்டகைகளிலே வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியேறியபோது, அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் உள்ளிட்ட அரசியல்வாதிகள், அடிப்படை வசதிகளை செய்து தருவதாக, உறுதியளித்தனர்.

ஆனாலும், ஆறு மாதங்கள் கடந்தபோதும், தாங்கள் சொல்லெணாத்துன்பங்களை அனுபவித்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.

நிலத்துக்காக போராடி நிலத்தை பெற்றதால், அதிகாரிகளாலும் அரசாங்கத்தாலும் நாங்கள் பழிவாங்கப்படுவது போன்றே உள்ளது என்று தெரிவித்த அப்பகுதி மக்கள், இதனை கவனத்தில் எடுத்து தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுத்தர நடடிவக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது,

“இவ்வாறு மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கான வசதிகள் ஏற்கெனவே கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் வழங்கப்பட்டு விட்டன. விரைவில் அவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .