2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘போர்ச் சூழலின்போது மூடப்பட்ட பாடசாலைகளை திறக்கவும்’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த கால போர்ச் சூழலின்போது மூடப்பட்ட எட்டு பாடசாலைகளையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை வேகமாக முன்னெடுக்கவில்லை என பெற்றோர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

பூநகரிக் கல்விக் கோட்டத்தில் ஆறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பொன்னாவெளி சைவப் பிரகாச வித்தியாலயம், பல்லவராயன்கட்டு இந்து தமிழ்க்கலவன் பாடசாலை, அத்தாய் முத்துக்குமாரசுவாமி வித்தியாலயம், தம்பிராய் அ.த.க.பாடசாலை, செட்டியகுறிச்சி அ.த.க.பாடசாலை, கௌதாரிமுனை அ.த.க.பாடசாலை என்பன மூடப்பட்டுள்ளன.

இதேபோன்று கரைச்சிக் கோட்டத்திலும் இரு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் குறித்த பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த பாடசாலைகள் இயங்கவில்லை.

பொன்னாவெளி சைவப் பிரகாச வித்தியாலயத்தை கிராஞ்சிக்கும் வேரவில்லுக்கும் இடையில் இயங்க வைக்க வேண்டும் என, வலயக் கல்விப் பணிமனையிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பல்லவராயன்கட்டுப் பாடசாலை உடனடியாக இயங்கக்கூடிய நிலையில் கிராமச் சூழல் உள்ள போதிலும் வலயக் கல்விப் பணிமனை இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, பல்லவராயன்கட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

பூநகரியில் போரால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள போதிலும் உவரப்பரம்பல் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து இருப்பதன் காரணமாக மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் பாடசாலைகளை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக, பூநகரியில் 10 கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் மாணவர்கள் பிற பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .