2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மன்னார் நகர சபை அமர்வில் அமைதியின்மை

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி   மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை அகற்றுவது தொடர்பான தீர்மானம், மன்னார் நகர சபையால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, மன்னார் நகரசபையின் 31ஆவது அமர்வில் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

மன்னார் நகரசபையின் 31ஆவது அமர்வு, நேற்று (21) காலை 10.30 மணியளவில் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சபை உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக கடந்த சபை அமர்வில் மன்னார் பகுதியில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் மேலதிகமாக குறித்த வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். கழிவு நீர் வடிகன்களுக்கு மேற்பகுதியிலும் கட்டுமானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

எனவே, குறித்த நடவடிக்கைகளுக்கு உடனடியாக நகர சபை   நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த கட்டுமான பணிகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், குறித்த தீர்மானம் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், நகரசபை தவிசாளர் மற்றும் நகரசபை செயலாளர் குறித்த தீர்மனத்தை நிறைவேற்றுவதில் பின் நின்றதாகவும், உறுப்பினர்கள் சிலர் சபை அமர்வின் போது குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன், நகரசபை தவிசாளர் ஒப்பமிட்டு உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட கடிதத்தில் குறித்த கட்டிடங்களை உடைப்பதற்காக நகரசபை உறுப்பினர்களை அழைத்திருந்த போதிலும், நகரசபை தவிசாளரும் செயலாளரும் ஏன் அப்பகுதிக்கு வரவில்லை எனவும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், 07 நாள் அவகாசத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாவில்லை என்றால் கடைகளை மூட வேண்டும் என தீர்மான மேற்கொள்ளப்பட போது, ஏன் அந்த தீர்மானம் நடை முறைப்படுத்தபடாமல் கடைகளை உடைக்க வேண்டும் என தீர்மானம் மாற்றி அமைக்கப்பட்டது எனவும் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த நகர சபையின் தவிசாளர்,  தான் அங்கு சமூகம் அளிக்க வேண்டியதில்லை எனவும் அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்து விட்டு பார்வையிட்டு உறுப்பினர் ஒருவரை பொறுப்பாக நிறுத்தி விட்டு தான் சென்றதாகவும் தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் இல்லை என உறுப்பினர்கள் தெரிவிக்க சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

 அதை தொடர்ந்து வாத பிரதி வாதங்கள் உச்ச நிலையை அடைய, சபை தீர்மாங்களை தூக்கி எறியுங்கள் எனவும் சபை உறுப்பினர்கள் இங்கே துள்ளக்கூடாதும் எனவும் நகரசபை தவிசாளர் கொந்தளிக்க, நகரசபை அமர்வில் மேலும் அமைதியின்மை ஏற்பட்டது.

நீண்ட நேரம் அமைதியின்மைக்கு பிறகு, சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன் பிறகு எங்கு இருந்து கடைகளை அகற்ற ஆரம்பிப்பது என உறுப்பினர்களுடையே தர்க்கம் ஏற்பட்டது. 

பின்னர் முன் பக்கமாக அகற்றுவதா பின்பக்கமாக அகற்றுவதா என  கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறு பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியில் பல்வேறுவிதமான விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, சபை அமர்வு 4 மணியளவில் நிறைவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .